ஓடம்போக்கியாற்றில் தண்ணீர் திறப்பு: திருவாரூரில், கதவணைகள் சீரமைப்பு பணி தீவிரம்


ஓடம்போக்கியாற்றில் தண்ணீர் திறப்பு: திருவாரூரில், கதவணைகள் சீரமைப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 30 Aug 2019 4:15 AM IST (Updated: 30 Aug 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

ஓடம்போக்கியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் திருவாரூரில் ஆற்றின் கதவணைகள் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர்,

கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்ததால் தமிழகத்திற்கு அதிகமாக காவிரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை கொள்ளவை எட்டியதால் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையை கடந்த 13-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கடைமடை பகுதியான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் சாகுபடியை மேற்கொள்வதற்காக கல்லணையில் இருந்து 17-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதால் வெண்ணாற்றில் தண்ணீர் திறக்கப்படாமல் வெட்டாற்றில் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தநிலையில் திருவாரூர் ஓடம்போக்கியாற்றில் பழுதடைந்த கதவணைகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் செலவில் பழவனக்குடி வாய்க்கால் சீரமைப்பு செய்வதாக விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் பணிகள் முடிக்கப்படாமல் இருந்தது.

புதிய கதவணைகள்

இந்தநிலையில் வெட்டாற்றின் மூலம் பாசனம் பெறும் ஓடம்போக்கியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இதற்கு இடையில் திருவாரூரில் ஓடம்போக்கியாற்றில் பழுதடைந்த கதவணைகள் சீரமைப்பு செய்யப்பட்டு, புதிய கதவணைகள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story