கீழ்வேளூர் ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி கலெக்டர் ஆய்வு


கீழ்வேளூர் ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Aug 2019 11:00 PM GMT (Updated: 29 Aug 2019 7:15 PM GMT)

கீழ்வேளூர் ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தார்.

கீழ்வேளூர்,

கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பாசன பகுதிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கீழ்வேளூர் பகுதியில் ரூ.55 லட்சம் மதிப்பில் ஓடம்போக்கியாறு “ஏ” பிரிவு வாய்க்கால் மற்றும் அதன் கிளை வாய்க்கால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும், வெண்மணி ஊராட்சி இருஞ்சியூர் கிராமத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் கடுவையாறு வாய்க்கால் மற்றும் அதன் கிளை வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

தூர்வாரும் பணி

நாணக்குடி கிராமத்தில் தூர்வாரும் பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பில் தெற்கு வடியார் வாய்க்கால், அதன் பிரிவு வாய்க்கால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் கீழ்குமிழி மறுகட்டுமானம் செய்யும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து கலெக்டர் சுரேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி வடிநிலக்கோட்டத்தில் (தஞ்சை) குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில் 12 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, பதிவு செய்யப்பட்ட 12 பாசன சங்கங்களின் உறுப்பினர்கள் மூலம் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

நாகை மாவட்டத்தில் 3 வடிநில கோட்டங்களையும் சேர்த்து மொத்தம் ரூ.16 கோடி மதிப்பில் 82 பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் 1,982 குளங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு குளத்திற்கும் பொதுமக்களின் பங்களிப்புடன் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உதவி செயற்பொறியாளர் பாண்டியன், உதவி பொறியாளர் மாணிக்கவேல், ஊராட்சி ஒன்றிய ஆணையர் திருமலைக்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story