திருச்சியில் பயங்கரம் சூதாட்ட கிளப் உரிமையாளர் காரில் கடத்தி கொலை 4 பேர் கும்பல் வெறிச்செயல்


திருச்சியில் பயங்கரம் சூதாட்ட கிளப் உரிமையாளர் காரில் கடத்தி கொலை 4 பேர் கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 29 Aug 2019 11:15 PM GMT (Updated: 29 Aug 2019 7:32 PM GMT)

திருச்சியில் சூதாட்ட கிளப் உரிமையாளரை காரில் கடத்திச் சென்று கொலை செய்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி வரகனேரி முதல்தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம்(வயது 55). இவர், நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சூதாட்ட கிளப் நடத்தி வந்தார். நிதி நிறுவன தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் சோமசுந்தரம் வீட்டில் இருந்து காரில் சமயபுரத்துக்கு புறப்பட்டார். திருச்சி தாராநல்லூரை சேர்ந்த டிரைவர் பாபு(35) காரை ஓட்டி சென்றார். அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே கார் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு கார் சோமசுந்தரத்தின் காரை வழிமறித்து நின்றது. அந்த காரில் வந்த 4 பேரில், 3 பேர் மட்டும் காரில் இருந்து இறங்கி சோமசுந்தரத்தையும், டிரைவர் பாபுவையும் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டினர். பின்னர் 3 பேரும் சோமசுந்தரம் வந்த காருக்குள் ஏறிக் கொண்டனர். சோமசுந்தரம் மற்றும் பாபுவின் கண்களை கட்டிவிட்டு காரை அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு ஓட்டி சென்றனர். நள்ளிரவு 1.30 மணி அளவில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அண்ணா கோளரங்கம் அருகே சென்றதும் காரை நிறுத்தினர். அதன்பிறகு காரில் இருந்து இறங்கிய 3 பேரும் பின்னால் வந்த தங்களுடைய காரில் ஏறி தப்பி சென்றனர்.

கொலை

சிறிதுநேரத்தில் டிரைவர் பாபு தனது கண்களில் கட்டப்பட்டு இருந்த துணியை விலக்கி பார்த்தார். அங்கு பின்சீட்டில் சோமசுந்தரம் படுத்து கிடந்தார். அவரை எழுப்பியபோது, அவர் எந்தவித அசைவுமின்றி கிடந்ததால் பாபு அதிர்ச்சி அடைந்தார். உடனே சோமசுந்தரத்தை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்துவிட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் கூறினர். இதையடுத்து அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சோமசுந்தரத்தை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டிரைவர் பாபு, சோமசுந்தரத்தின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். காந்திமார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் வழக்குப்பதிவு செய்து, முதல்கட்டமாக டிரைவர் பாபுவிடம் விசாரணை நடத்தினார். சோமசுந்தரத்தின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு

சூதாட்ட கிளப்புகளில் பணத்தை தோற்றவர்கள், பணம் பறிப்பதற்காக சோமசுந்தரத்தை கடத்தி சென்று கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என உடனடியாக தெரியவில்லை. நள்ளிரவில் அவர்கள் காரில் எந்தெந்த பகுதிக்கெல்லாம் சென்றனர் என கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே டிரைவர் பாபு போலீசாரிடம் கூறிய தகவல்கள் உண்மையா? எனவும் விசாரித்து வருகிறார்கள். திருச்சியில் சூதாட்ட கிளப் உரிமையாளர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story