பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவுநீரை அகற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் - திருவேற்காடு நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை


பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவுநீரை அகற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் - திருவேற்காடு நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Aug 2019 11:00 PM GMT (Updated: 29 Aug 2019 7:35 PM GMT)

போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவுநீரை அகற்றினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என திருவேற்காடு நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பூந்தமல்லி,

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் திருவேற்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகராட்சி கமிஷனர் சித்ரா தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் சாமுவேல், கழிவுநீர் வாகன உரிமையாளர்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் சித்ரா கூறியதாவது:-

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் கழிவுநீர் வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்த வாகனங்கள் மட்டுமே கழிவுநீரை அகற்ற அனுமதிக்கப்படும்.

கழிவுநீரை திறந்த வெளிகளில் கொட்டக்கூடாது. அதனை முகப்பேர், திருமழிசை ஆகிய இடங்களில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கொண்டு சென்று கொட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீரை அகற்றினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீரை அகற்றி உயிரிழப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலான இழப்பீட்டை வாகன உரிமையாளர் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

நகராட்சி துப்புரவு பணியாளர்களை ஆசைவார்த்தை கூறி பணிக்கு அழைக்கக்கூடாது. கழிவுநீர் வாகனங்கள் முறையாக செயல்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பணியில் நகராட்சி சுகாதார ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story