வீர, தீர செயல்புரிந்த பெண் குழந்தைகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


வீர, தீர செயல்புரிந்த பெண் குழந்தைகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 Aug 2019 10:30 PM GMT (Updated: 29 Aug 2019 7:44 PM GMT)

வீர, தீர செயல்புரிந்த பெண் குழந்தைகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டி,

தமிழக அரசு சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து உள்ளது. மேலும் வீர, தீர செயல்புரிந்த 5 வயதுக்கு மேல் உள்ள 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில், அதற்கான மாநில விருது ஒன்றை அறிவித்து கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி ஆண்டுதோறும் மேற்குறிப்பிட்டவாறு வீர, தீர செயல் புரிந்து வரும் சிறந்த பெண் குழந்தைக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில்(ஜனவரி 24-ந் தேதி) பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இதற்கு 5 வயதுக்கு மேல் உள்ள 18 வயதுக்கு உட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

இதில் பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள் வரைதல், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி இருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்திருத்தல் ஆகியவை அடங்கும். மாநில அளவிலான தேர்வுக்குழு மூலம் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை கூர்ந்தாய்வு செய்து, மேற்கண்ட விருதினை பெற உரிய நபர் தேர்ந்தெடுக்கப்படுவார். விருதினை பெற உரிய முன்மொழிவுகளை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனங்களிடம் விவரங்களை அறிந்து பரிந்துரைக்கலாம்.

பரிந்துரையில் குழந்தையின் பெயர், தாய் பெயர், தந்தை பெயர், முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீர, தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவை குறித்து ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும். மேற்கண்ட தகுதியான பெண் குழந்தைகள் விண்ணப்பங்களை வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story