அவினாசி அருகே குடியிருப்பு பகுதியில் கழிவுகளை கொட்டுவதால் நோய் பரவும் அபாயம்
அவினாசி அருகே குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் லாரிகள் மூலம் மனிதக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க தாசில்தாரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி அவினாசிலிங்கம் பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நேற்று சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. தனி தாசில்தார் (சமுதாய பாதுகாப்பு திட்டம்) ராஜேஷ் தலைமையில் நடந்த முகாமில் மண்டல துணை தாசில்தார் உஷாராணி, கிராம நிர்வாக அலுவலர் செண்பகம் பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஏ.வி.தனபால், அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் மு.சுப்பிரமணியம், பழங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.செந்தில்குமார் துணைத்தலைவர் மிலிட்டரி நடராசன், முன்னாள் கவுன்சிலர்கள் தேவிசண்முகம், கோபால் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
இதில் அவினாசியை அடுத்து பச்சாம்பாளையம் கிராம பொதுமக்கள் திரண்டுவந்து தனி தாசில்தாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
பழங்கரை ஊராட்சி பச்சாம்பாளையத்தில் பால்வாடி மற்றும் தனியார் பள்ளி அதைச் சுற்றிலும் குடியிருப்புகள் நிறைந்துள்ளன. இந்த பகுதியில் நள்ளிரவு நேரத்தில் லாரிகளில் மனித கழிவுகளைக்கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை அனைவருக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவ்வாறு கழிவுகளை கொட்டும் மர்ம நபர்களை கண்டறிந்து அங்கு மனிதக் கழிவுகளைக் கொட்டாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல் பழங்கரை ஊராட்சி பகுதியில் தெருவிளக்கு, சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும், அவினாசிலிங்கம் பாளையத்திலிருந்து தேவம்பாளையம் செல்லும் ரோட்டை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரிடம் அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அவர் அனைத்து மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
Related Tags :
Next Story