காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: நூற்பாலை சூப்பர்வைசர் தூக்குப்போட்டு தற்கொலை - ஒடிசாவை சேர்ந்தவர்


காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: நூற்பாலை சூப்பர்வைசர் தூக்குப்போட்டு தற்கொலை - ஒடிசாவை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 30 Aug 2019 3:30 AM IST (Updated: 30 Aug 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒடிசாவை சேர்ந்த நூற்பாலை சூப்பர்வைசர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாராபுரம், 

ஒடிசா மாநிலம் அமரமுண்டா மாவட்டம் சண்டேத்தாரா ஊரை சேர்ந்தவர் பாலிக்குலிபட்டேல். இவரது மகன் சத்தார்பட்டேல் (வயது 23) இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, தாராபுரம் அருகே தாசநாய்க்கன்பட்டியில் உள்ள தனியார் நூற்பு ஆலையில் சேர்ந்து, சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். இவருடன் ஒடிசாவை சேர்ந்த பலர் நூற்பு ஆலையில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் தங்குவதற்கு நூற்பு ஆலையில் அறைகள் கட்டி தரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை அறையில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். சத்தார்பட்டேல் மட்டும் அறையில் இருந்துள்ளார். இந்த நிலையில் வேலைக்கு சென்றவர்கள் உணவு இடைவேளையின் போது, தங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளனர்.

அப்போது அந்த அறையில் சத்தார்பட்டேல் தூக்குபோட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. அதையடுத்து அலங்கியம் போலீ சாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து. சத்தார்பட்டேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் சத்தார்பட்டேல் அவருடைய சொந்த ஊரில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவருடைய காதல் பெற்றோருக்கு தெரிந்துவிட்டதால், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். தான் காதலித்த பெண்ணை பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்ய முடியவில்லையே என்கிற மனவேதனையில், சத்தார்பட்டேல் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

Next Story