விநாயகர் சதுர்த்தி விழா: சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் - கலெக்டர் ஷில்பா வேண்டுகோள்
நெல்லை மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என கலெக்டர் ஷில்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நெல்லை,
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது. அவற்றை பாதுகாப்பது மக்களின் மிகப்பெரிய கடமை ஆகும். வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அப்போது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கரைக்கப்படுகின்றன. நீர் நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு நெல்லை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிட்ட இடங்களில் விநாயகர் சிலையை கரைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்ற கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கால் தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்.
நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்கள் உடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story