குடிமராமத்து திட்டத்தில் முறைகேடு நடப்பதாக புகார்: விவசாயிகள் கையில் சங்கிலியை கட்டிக் கொண்டு நூதன போராட்டம்


குடிமராமத்து திட்டத்தில் முறைகேடு நடப்பதாக புகார்: விவசாயிகள் கையில் சங்கிலியை கட்டிக் கொண்டு நூதன போராட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2019 3:15 AM IST (Updated: 30 Aug 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

குடிமராமத்து திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கையில் சங்கிலியை கட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் வீரப்பன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, உதவி கலெக்டர்கள் சிம்ரான்ஜித் சிங் கலோன், தனப்பிரியா, விஜயா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆசீர் கனகராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

சடையனேரி கால்வாயில் செங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள சிறிய தடுப்பணையை அகற்ற வேண்டும். நாசரேத் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள கால்நடைத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தை அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கடம்பாகுளம் தூர்வாருவதற்கு முறையான விவசாயிகள் சங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2016-17-ம் ஆண்டு ஜம்புலிங்கபுரம் பகுதியில் வாழை பயிருக்கு காப்பீட்டு தொகை எந்த ஒரு விவசாயிக்கும் வழங்கப்படவில்லை. இதற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதே நேரத்தில் எங்கள் பகுதியில் உள்ள குளம் குடிமராமத்து திட்டத்தில் பராமரிக்கப்படுகிறது. ஆனால் தண்ணீர் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு சீரமைப்பு பணிகள் நடக்கிறது. ஆகையால் கலெக்டர் நேரடியாக எங்கள் பகுதிக்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படவில்லை. பயிர்க்கடன் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் குடிமராமத்து திட்டத்தில் முறைகேடுகள் நடந்து வருகின்றன. ஆளும் கட்சியினருக்கு அதிகாரிகள் துணையாக உள்ளனர். ஆகையால் முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து நீர்நிலைகளையும் தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் தங்களது கையில் சங்கிலியை கட்டிக் கொண்டு நூதன போராட்டம் நடத்தினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைக்கு பதில் அளித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 ஆயிரம் எக்டர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் மருதூர் அணைக்கட்டை வந்தடைந்து உள்ளது. விரைவில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கும் தண்ணீர் வந்து சேரும். அதன்பிறகு 4 கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்படும்.

பயிர் காப்பீட்டு திட்டத்தை பொறுத்தவரை 2017-18-ம் ஆண்டுக்கு இதுவரை 75 ஆயிரத்து 588 விவசாயிகளுக்கு ரூ.72 கோடி காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது. படர்ந்தபுளி கிராம விவசாயிகளுக்கு கோர்ட்டு உத்தரவுப்படி காப்பீட்டு தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மக்காச்சோளப்பயிரில் படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீட்டு தொகை வழங்கி உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 400 விவசாயிகளுக்கு ரூ.33 கோடி இழப்பீட்டு தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.2 கோடியே 15 லட்சம் இழப்பீட்டு தொகை, விவசாயிகள் வெளியூர்களில் இருப்பதால் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் விரைந்து ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குடிமராமத்து பணிகளில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால், குறிப்பிட்டு புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு பயிர்க்கடன் வழங்குவதற்காக ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆகையால் விவசாயிகள் விண்ணப்பித்தால் பயிர்க்கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மத்திய அரசின் விருது பெற்ற மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை விவசாயிகள் பாராட்டி மலர் கொத்து கொடுத்து சால்வை அணிவித்தனர்.

Next Story