சூளகிரி அருகே, வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் நகை கொள்ளை


சூளகிரி அருகே, வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 30 Aug 2019 3:45 AM IST (Updated: 30 Aug 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராகவன்(வயது 45). இவரது மனைவி சுசீலா. விவசாயிகளான இவர்கள் அப்பகுதியில் உள்ள தங்கள் விவசாய தோட்டத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். இந்தநிலையில், நேற்று மதியம் தோட்டத்தில் சுசீலா தனியாக மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். பின்னர் அவர், சுசீலாவிடம், மாட்டை விலைக்கு வாங்க வந்ததாக கூறி நீண்ட நேரம் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு சுசீலா மாடுகளை விற்பதில்லை எனக்கூறி விட்டார். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார்.

இதற்கிடையே சுசீலா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 23 பவுன் நகைகள், ரூ. 45 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுசீலா இது தொடர்பாக சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த கொள்ளையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் எனவும், சுசீலாவிடம் மாடு வாங்குவது போல் ஒரு நபர் பேசி கொண்டிருக்கையில் மற்ற நபர்கள் வீட்டின் கதவை உடைத்து இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story