பணம் வைத்து சூதாட்டம்: தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 8 பேர் கைது - கார், மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்


பணம் வைத்து சூதாட்டம்: தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 8 பேர் கைது - கார், மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Aug 2019 4:15 AM IST (Updated: 30 Aug 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

பாகலூர் அருகே பணம் வைத்து சூதாடியதாக தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், 12 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் அருகே உள்ள கர்ணபள்ளி என்ற இடத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக பாகலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு லே-அவுட் பகுதியில் மறைவான இடத்தில் வைத்து ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. ஆனால் போலீசார் சிலரை துரத்தி சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள், சூளகிரி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நாகேஷ்(வயது 45) உள்பட 8 பேர் என்பதும், பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தி.மு.க. செயலாளர் உள்பட 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரத்து 900, ஒரு கார் மற்றும் 12 மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் தப்பி ஓடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story