மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நீர்நிலைகளை புனரமைப்பது குறித்து ஆய்வு
மதுரை உள்பட 5 மாவட்டங்களில் நீர் நிலைகளை புனரமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் 4 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மதுரை,
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வளர்ச்சித் திட்ட பணிகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துவது மற்றும் நீர் நிலைகளை புனரமைப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை உலக தமிழ் சங்க கலை அரங்கத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அமைச்சர்கள் உதயகுமார், பாஸ்கரன், எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் (பொறுப்பு) பாஸ்கரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன், பேரூராட்சிகளின் இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு ஆய்வு செய்தார். இதில் கலெக்டர்கள் ராஜசேகர் (மதுரை), விஜயலட்சுமி (திண்டுக்கல்), ஜெயகாந்தன் (சிவகங்கை), வீரராகவராவ் (ராமநாதபுரம்), மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன், எம்.எல்.ஏ.க்கள் நீதிபதி, மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், பெரியபுள்ளான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மதுரை மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிகளிலும், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 19 நகராட்சிகள், 73 பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள், டெங்கு மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துவது ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் நிலத்தடி நீர் ஆதாரங்களை புனரமைத்து புத்துயிர் அளிப்பது, நீர் தேக்கங்களை மேம்படுத்துவது, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவது, நீர்நிலைகள் மற்றும் கோவில் குளங்களை புனரமைப்பது, பொது மற்றும் தனியார் கட்டிடங்களில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு அமைப்புகளுக்கு புத்துயிர் அளிப்பது போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கையேட்டினை அமைச்சர்கள் வெளியிட்டனர்.
முன்னதாக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, வேலுமணி, உதயகுமார், பாஸ்கரன், எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் மதுரை கிழக்கு ஒன்றியம், பொய்கைக்கரைப்பட்டி ஊருணியில் ரூ.1 லட்சம் செலவில் நடந்து வரும் குடிமராமத்து பணியை ஆய்வு செய்தனர்.
அப்போது கிழக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மூர்த்தி, அமைச்சர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அமைச்சர் வேலுமணியிடம் மூர்த்தி எம்.எல்.ஏ, “எனது கோரிக்கையை ஏற்று இந்த ஊருணியை தூர்வார நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி“ என்றார். இது குறித்து மூர்த்தி எம்.எல்.ஏ. கூறும் போது, “இந்த பொய்கைக் கரைப்பட்டி ஊருணி வரலாற்று சிறப்புடையது. நூற்றாண்டுகளாக அழகர்கோவில் தெப்பத்திருவிழா இங்கு தான் நடைபெற்று வருகிறது. தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் இந்த ஊருணியை தூர்வார வேண்டும் என்ற எனது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது“ என்றார். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் சத்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள வீரகுளம் கண்மாயில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது மதுரை புறநகர் மாவட்ட பேரவை துணை செயலாளர் ஜபார் உடனிருந்தார்.
Related Tags :
Next Story