வத்திராயிருப்பு பகுதியில், கண்மாய்களை சேதப்படுத்தி மணல் திருட்டு
வத்திராயிருப்பு பகுதியில் கண்மாய்களை குடைந்து மணல் திருட்டு நடந்து வரும் நிலையில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதியில் பிளவக்கல் அணைகளின் மூலம் பாசன வசதி பெறும் 40 பெரிய கண்மாய்களும் 50-க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்களும் உள்ளன. இவை அனைத்தும் மழையின்றி ஒரு சொட்டுத்தண்ணீர்கூட இல்லாமல் உள்ளன. இவற்றை சீர் திருத்தம் செய்வதற்காக ஒரு சில கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்ற கண்மாய்கள் அனைத்தும் கேட்பாரின்றி கிடக்கின்றன. இதனால் பெரும்பாலான கண்மாய்களில் மணல் திருட்டு அதிக அளவில் நடைபெறுகிறது.
முக்கியமாக வத்திராயிருப்பு வில்வராயன் கண்மாய், சேதுநாராயணபுரம் கொசவன்குளம் கண்மாய், வ.புதுப்பட்டி அனுப்பங்குளம் கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் மாட்டு வண்டிகள் மூலமும் டிராக்டர்கள் மூலமும் அதிக அளவில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடக்கிறது. மணல் திருடுபவர்கள் மேல் பகுதியில் உள்ள மண்ணை விட்டுவிட்டு மணல் கிடைக்கும் இடங்களை கண்டறிந்து அந்த பகுதியில் 20 அடி ஆழம் வரை தோண்டி கண்மாய்களை கடுமையாக சேதப்படுத்துகின்றனர். ஒரு சில இடங்களில் கண்மாயின் கரைகளை கூட விட்டு வைக்காமல் குடைந்து மணல் அள்ளி செல்கின்றனர். ஏறக்குறைய 30 அடி நீளத்திற்கு பாதாள குகை போல தோண்டி மணல் அள்ளுகின்றனர். இதனால் கண்மாய் கரைகள் மிகவும் பலவீனப்பட்டு கிடக்கின்றன.
மணல் திருடர்களால் தினந்தோறும் கண்மாய்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன. மாட்டு வண்டிக்காரர்களின் பரிதாப நிலையை கருதி இவர்களை வருவாய்த்துறையினர் கண்டுகொள்வதில்லை. அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் மாட்டு வண்டிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இது கண்மாய்களை மேலும் பலவீனப்படுத்துவதாக உள்ளது.
எனவே வரும் மழைக்காலத்திற்குள் இவற்றை சீரமைக்கவும், இந்த மணல் திருட்டை இரும்புக்கரம் கொண்டு அடக்கவும் மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story