காட்பாடி மின்வாரிய அலுவலகத்தில்; மின்தடை புகார் பதிவு மையம் - அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்
காட்பாடி மின்வாரிய அலுவலகத்தில் கணினி மயமாக்கப்பட்ட மின்தடை புகார் பதிவு மையத்தை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்.
காட்பாடி,
வேலூர் மின்பகிர்மான வட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ரூ.23 லட்சம் மதிப்பில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கணினி மயமாக்கப்பட்ட மின்தடை புகார் பதிவு மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு வேலூர் மண்டல தலைமை பொறியாளர் கே.நந்தகோபால் தலைமை தாங்கினார். வேலூர் வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சித்ரா வரவேற்றார்.
இதில், சிறப்பு விருந்தினராக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு மின்தடை புகார் பதிவு மையத்தை திறந்து வைத்து, மையத்தின் செயல்பாடுகளை சோதித்து பார்த்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. நம்மிடம் தேவையான அளவு மின்சாரம் இருக்கிறது. இருந்தாலும் சில இடங்களில் ஏற்படும் மின்இடையூறுகளை உடனடியாக சரிசெய்ய இந்த மின்தடை புகார் பதிவு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த மையத்துக்கு 1912 மற்றும் 1800 425 8912 என்ற இலவச தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மின்தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம். இதன்மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் உடனடியாக சரி செய்யப்படும். இது மக்கள் பாராட்டும் திட்டமாக செயல்படும்’ என்றார்.
விழாவில் தி.மு.க. எம்.எல்.ஏ. ப.கார்த்திகேயன், ஆவின் தலைவர் வேலழகன், வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் எம்.மூர்த்தி, காட்பாடி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பி.நாராயணன், பொதுக்குழு உறுப்பினர் ரமாதேவி எம்.ஆர்.ரெட்டி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் சி.கே.மணி, ஜி.கே.முரளி, பகுதி செயலாளர் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story