வேலூரை 3-ஆக பிரிக்கும்போது எல்லை கிராமங்களை அந்த பகுதியினர் விரும்பும் மாவட்டத்துடன் சேர்க்க வேண்டும்


வேலூரை 3-ஆக பிரிக்கும்போது எல்லை கிராமங்களை அந்த பகுதியினர் விரும்பும் மாவட்டத்துடன் சேர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 30 Aug 2019 4:00 AM IST (Updated: 30 Aug 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிக்கும் போது எல்லை கிராம மக்களை விரும்பும் மாவட்டத்துடன் சேர்க்க வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்தனர்.

அடுக்கம்பாறை,

வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக கூடுதல் தலைமை செயலாளர் சத்யகோபால் தலைமை தாங்கினார். வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர்கள் மெகராஜ் (வேலூர்), இளம்பகவத் (ராணிபேட்டை), பிரியங்கா (திருப்பத்தூர்), சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நில எடுப்புப்பிரிவு தாசில்தார் பாலாஜி வரவேற்றார்.

கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள், வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள், பொதுமக்கள் என 114 பேர் தங்களது கருத்துகளை மனுவாக வழங்கினர். முன்கூட்டியே பதிவு செய்து டோக்கன் பெற்ற 44 பேருக்கு மட்டும் கருத்துகளை கூற அனுமதி வழங்கப்பட்டது.

வணிகர் சங்க பேரவை செயலாளர் ஞானவேல்:-

வேலூர் மாவட்டத்தின் தலைநகரமான வேலூரை ஸ்மார்ட் சிட்டி நகரமாக உருவாக்க ரூ.5 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தற்போது வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்தால் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தடைப்படும். எனவே வேலூர் மற்றும் திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு வேலூர் மாவட்டத்தை 2-ஆக பிரிக்க வேண்டும். வேலைவாய்ப்பு கொண்ட தொழிற்சாலைகள் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு சென்றுவிடும். வேலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு இல்லாத மாவட்டமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அரசு அறிவித்துள்ளபடி வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிக்காமல் 2-ஆக பிரிக்க வேண்டும் என்றார்.

பா.ம.க. ஒன்றிய செயலாளர் (கணியம்பாடி) வேலாயுதம்:-

கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணியம்பாடி, அடுக்கம்பாறை, மூஞ்சூர்பட்டு, சாத்துமதுரை, நெல்வாய் உள்ளிட்ட ஊராட்சிகள் ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் உள்ளது. இவற்றை ராணிப்பேட்டை மாவட்டத்துடன் சேர்க்கக்கூடாது. வேலூர் வழியாகத்தான் ராணிப்பேட்டைக்கு செல்ல வேண்டும். அதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவார்கள். கணியம்பாடி உள்ளிட்ட ஊராட்சிகளை அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியுடன் இணைத்து, அவற்றை வேலூர் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்றார்.

மேட்டு இடையம்பட்டியை சேர்ந்த துரைபாண்டியன்:-

வேலூர் மாவட்டத்தை பிரித்தால் தற்போதுள்ள ஏலகிரி, குடியாத்தம் மோர்தானா அணை, அரக்கோணம் ராஜாளி கடற்படை, காட்பாடி ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புமிக்க இடங்கள் 3 மாவட்டங்களுக்கும் சென்று விடும். அதனால் வேலூர் மாவட்டத்தின் பெருமை நாளடைவில் மறைந்துவிடும் வாய்ப்புள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிக்காமல், தற்போது உள்ளது போன்று இருக்க வேண்டும் என்றார்.

அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு:-

காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவலம் பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகள் வாலாஜா தாலுகாவில் உள்ளது. அதனை காட்பாடி தாலுகாவுடன் இணைக்க வேண்டும். காட்பாடியில் தாலுகா மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சோளிங்கர் ஒன்றியத்தில் உள்ள வள்ளிமலை, பொன்னை உள்ளிட்ட 20 ஊராட்சிகளையும் காட்பாடி தாலுகாவில் இணைத்து, வேலூர் மாவட்டத்துடன் சேர்க்க வேண்டும்.

குடியாத்தத்தை சேர்ந்த வக்கீல் மோகன்ராஜ்:-

வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிப்பதை வரவேற்கிறோம். குடியாத்தத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைய வேண்டும். மேலும், புதிய வருவாய் கோட்டமும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அகரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருவராஜபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளையும் அணைக்கட்டு தாலுகாவுடன் இணைத்து வேலூர் மாவட்டத்துடன் சேர்க்க வேண்டும் என்றார்.

வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்படும் போது அந்தந்த மாவட்டங்களின் எல்லைகளையொட்டி உள்ள கிராம மக்கள் தாங்கள் விரும்பும் மாவட்டங்களில் தங்கள் கிராமத்தை சேர்க்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டத்துக்கு பின்னர் கூடுதல் தலைமை செயலாளர் சத்யகோபால் நிருபர்களிடம் கூறுகையில், ‘பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னரே 3 மாவட்டங்களையும் தாலுகா, சட்டமன்ற வாரியாக பிரிப்பது குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.

கூட்டத்தில், பயிற்சி துணை கலெக்டர் பூர்ணிமா, தாசில்தார்கள் ரமேஷ் (வேலூர்), பெருமாள் (அணைக்கட்டு), வச்சலா (ஆற்காடு), பூமா (வாலாஜா), அணைக்கட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் குமார், துணை தாசில்தார்கள் சண்முகசுந்தரம், முரளிதரன், பன்னீர்செல்வம், தேர்தல் துணை தாசில்தார் வேண்டா, பென்னாத்தூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்கள் கூறும் கருத்துகளை பதிவு செய்தனர். வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமையில் 120 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story