கே.வி.குப்பம் அருகே இரு தரப்பினர் மோதல்: 2 மோட்டார்சைக்கிள் எரிப்பு; 5 பேர் கைது
கே.வி.குப்பம் அருகே இரு தரப்பினர் மோதலால் 2 மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடியாத்தம்,
கே.வி.குப்பம் அருகே கீழ்முட்டுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தரணி (வயது 27), லலித்குமார் (27). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த கோபி (24), விஷ்ணு (23), சக்திவேல் (20), அருண் (25) உள்ளிட்டோருக்கும் இடையே பஸ்சில் சென்று வந்தபோது தகராறு இருந்து வந்துள்ளது. நேற்றுமுன்தினம் காலையில் வடுகந்தாங்கல் பகுதியில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் காயம் அடைந்த தரணி, லலித்குமார் ஆகியோர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தரணி கே.வி.குப்பம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அன்று இரவு கீழ்முட்டுக்கூர் பகுதியில் ஒரு தரப்பை சேர்ந்தவர்களின் 2 மோட்டார்சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பனமடங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து தரணி, லலித்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் தரணி கொடுத்த புகாரின்பேரில் கே.வி.குப்பம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, போலீஸ் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டனர். இதனைதொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து வடுகந்தாங்கல் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கோபி, விஷ்ணு, சக்திவேல் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
தொடர்ந்து கீழ்முட்டுக்கூர் பகுதியில் அசம்பாவித சம்பவத்தை தவிர்க்கும் வகையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவங்களால் கீழ்முட்டுக்கூர் மற்றும் கே.வி.குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story