மாயமான வழக்கில் திடீர் திருப்பம்: ஜவுளி வியாபாரி மனைவி திருப்பூரில் பதுங்கலா? போலீசார் தீவிர விசாரணை
ஜவுளி வியாபாரி மனைவி மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னங்குறிச்சி,
சேலம் சின்னதிருப்பதி சந்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 40), ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி தமிழ்செல்வி. இவர்களுடைய மகன் ரவி கிருஷ்ணன் (13). 8-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 27-ந் தேதி இவன் டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பினான்.
அங்கு தனது தாய் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். மேலும், வீட்டில் உள்ள அறையில் ‘விமல் ஆட்கள் காப்பாத்துங்க ஹரி‘ என ரத்தத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.
முதற்கட்டமாக, தமிழ்செல்வி கொலை செய்யப்பட்டாரா?, கடத்தப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஹரிகிருஷ்ணன், அவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த விமல் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக தமிழ்செல்வி திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் போலீசார் தமிழ்செல்வியை மீட்க திருப்பூர் விரைந்துள்ளனர். அவரை மீட்டபின்னர் தான் நடைபெற்ற சம்பவத்துக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story