மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி; தொழிலாளர் பாதுகாப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்


மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி; தொழிலாளர் பாதுகாப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2019 3:45 AM IST (Updated: 30 Aug 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் தொழிலாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம், 

சேலம் மாவட்ட தமிழ்நாடு மோட்டார் வாகனதொழில், தொழிலாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சேலம் மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் உதயகுமார், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் பாலு, மாநகர செயலாளர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அப்துல்வகாப், இணை செயலாளர் இளங்கோவன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்க தலைவர் செம்பன், பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சேலம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க செயலாளர் நாகராஜன், துணைத்தலைவர் சண்முகம், உரிமைக்குரல் ஓட்டுனர் தொழிற்சங்க செயலாளர் ராஜா, பொருளாளர் பிரகாசம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

நாடு முழுவதும் மோட்டார் தொழிலில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு உள்ளார்கள். மத்திய அரசு தன்னிச்சையாக நிறைவேற்றி உள்ள சாலை போக்குவரத்து மசோதாவால் இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ள அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக மோட்டார் உற்பத்தியில் மட்டும் 40 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story