பழனியில், பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை


பழனியில், பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 30 Aug 2019 3:15 AM IST (Updated: 30 Aug 2019 5:48 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

பழனி,

பழனி முருகன் கோவில் பிரசாதங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பஞ்சாமிர்தம் ஆகும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தத்தை விரும்பி வாங்கி செல்கின்றனர். இந்த பஞ்சாமிர்தம் கோவில் நிர்வாகம் சார்பில் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று தனியார் நிறுவனங்கள் மூலமும் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் 10 வாகனங்களில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் பழனிக்கு வந்தனர்.

அவர்கள் பழனியில் உள்ள பஞ்சாமிர்தம் விற்பனை செய்யும் தனியார் நிறுவன கடைகளில் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அந்த கடைகளில் பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட பிரசாத பொருட்கள் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அந்த கடைகளின் கதவுகளும் மூடப்பட்டன.

பின்னர் கடைகளில் இருந்த ஊழியர்களிடம் விற்பனை தொடர்பான ஆவணங்களை வருமான வரித்துறையினர் வாங்கி சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதுசம்பந்தமாக கடைகளில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். சோதனையின்போது கடைகளில் இருந்து ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

அதே நேரத்தில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யும் அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடு, குடோன்கள் மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு கிடைத்த ஆவணங்களை வைத்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சோதனை நேற்று காலை தொடங்கி மாலை வரை நடந்தது. இதனால் பழனியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story