சம்பா சாகுபடிக்கு எந்திர முறையில் நேரடி நெல் விதைப்பு நிகழ்ச்சி அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்


சம்பா சாகுபடிக்கு எந்திர முறையில் நேரடி நெல் விதைப்பு நிகழ்ச்சி அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 31 Aug 2019 4:30 AM IST (Updated: 31 Aug 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

சம்பா சாகுபடிக்கு எந்திர முறையில் நேரடி நெல் விதைப்பு நிகழ்ச்சியை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

மன்னார்குடி,

மன்னார்குடி அருகே உள்ள மேலவாசல் குமரபுரத்தில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை சார்பில் சம்பா சாகுபடிக்கு எந்திர முறையில் நேரடி நெல் விதைப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவக் குமார் வரவேற்றார். இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு எந்திர முறையில் நேரடி நெல் விதைப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சம்பா பருவத்தில் நேரடி நெல் விதைப்பு ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 566 ஏக்கரிலும், நடவு முறையில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 995 ஏக்கர் என மொத்தம் 3 லட்சத்து 25 ஆயிரத்து 560 ஏக்கரில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் சம்பாவில் 75 ஆயிரத்து 567 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. சம்பா சாகுபடிக்கு இதுவரை 867 மெட்ரிக் டன் விதை நெல் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவையான விதை நெல் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடிக்கு தேவையான எந்திரங்கள், 23 விதையிடும் கருவி, 1,922 பவர் டிராக்டர்கள், 18 சமப்படுத்தும் கருவிகள், 153 நடவு எந்திரங்கள், 1,591 டிராக்டர்கள் செயல்பாட்டில் உள்ளது.

மேலும் செப்டம்பர் மாத உர தேவையில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ள உழவு மானிய திட்டத்தின் கீழ் மாநிலத்திற்கு 5 லட்சம் ஏக்கர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.600 வீதம் ரூ.30 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திற்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.10 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உழவு மானியம் பெற தகுதியான பயனாளிகள் அனைத்து வட்டாரங்களிலும் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். நேரடி விதைப்பு செய்துள்ள செய்ய விரும்புகின்ற விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு விவசாயிகளை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ரவீந்திரன், உதவி வேளாண் இயக்குனர்கள் திருத்துறைப்பூண்டி சுவாமிநாதன், கோட்டூர் தங்கபாண்டியன், திருவாரூர் ஹேமா ஹெப்சிகா நிர்மலா, முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்வாசுகிராம், மன்னார்குடி கூட்டுறவு பால் வழங்கும் சங்க தலைவர் கலியபெருமாள், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மன்னார்குடி வேளாண்மை உதவி இயக்குனர் சரஸ்வதி நன்றி கூறினார்.

Next Story