குதிரை பேரத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் வீடுகளில் ஏன் வருமான வரி சோதனை நடக்கவில்லை? காங்கிரஸ் கேள்வி


குதிரை பேரத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் வீடுகளில் ஏன் வருமான வரி சோதனை நடக்கவில்லை? காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 31 Aug 2019 3:15 AM IST (Updated: 31 Aug 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

குதிரை பேரத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் வீடுகளில் ஏன் வருமான வரி சோதனை நடக்கவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அரசியல் உள்நோக்கத்துடன் விசாரணை அமைப்புகளை மத்திய பா.ஜனதா அரசு தவறாக பயன்படுத்துகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இத்தகைய போக்கு நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளை மிரட்டும் தந்திரத்தை விசாரணை அமைப்புகள் மூலம் பயன்படுத்துகிறது. பா.ஜனதாவின் கொள்கைக்கு எதிரானவர்களை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) தலைவர்களை இலக்காக வைத்து வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. விசாரணை அமைப்புகள் ஒரு கட்சிக்கு ஆதரவாக பணியாற்றினால் எப்படி?. முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை கடந்த 2 ஆண்டுகளாக இலக்காக நிர்ணயித்து மத்திய அரசு செயல்படுகிறது.

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கர்நாடகத்தில் டி.கே.சிவக்குமார் பாதுகாப்பு கொடுத்தார். இதனால் அவரை மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. டி.கே.சிவக்குமார் கட்சியின் விசுவாசமிக்க தலைவர். எடியூரப்பா நடத்திய குதிரை பேர ஆடியோ உரையாடல் வெளியே வந்தது. அவரது வீடுகளில் வருமான வரி சோதனை ஏன் நடைபெறவில்லை.

தற்போது துணை முதல்-மந்திரியாக உள்ள ஒருவர், ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அவரது வீடுகளில் எந்த சோதனையும் நடக்கவில்லை. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது. அந்த துறைகளின் அதிகாரிகள் மத்திய அரசின் கைப்பாவையாக பணியாற்றுகிறார்கள். தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை.

ஊழல் செய்திருந்தாலும், பா.ஜனதாவுக்கு சென்றுவிட்டால் அவர்கள் மீது வருமான வரித்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. பா.ஜனதாவுக்கு செல்லாவிட்டால், பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரமேஷ் ஜார்கிகோளி வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது. ஆனால் அவர் பா.ஜனதாவுடன் தொடர்பில் உள்ளதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் இழுத்தனர். இதில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் குதிரை பேரம் நடந்துள்ளது. இந்த விஷயத்தில் வருமான வரித்துறை ஏன் சோதனை நடத்தவில்லை. டி.கே.சிவக்குமார் மீது யாராவது புகார் கொடுத்தார்களா?. வருமான வரித்துறையினர் தாமாக முன்வந்து சோதனை நடத்தினர். அதேபோல் குதிரை பேரம் நடத்திய பா.ஜனதா தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்த வேண்டியது தானே. வருமான வரித்துறை பாரபட்சமாக செயல்படுவது ஏன்?.

இந்த வழக்கில் இருந்து டி.கே.சிவக்குமார் வெளியே வருவார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் நிற்கிறது. அமலாக்கத்துறைக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தும். நாங்கள் அனைத்து வகையான போராட்டத்திற்கும் தயாராகி வருகிறோம். இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Next Story