தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: நடிகர் ரஜினிகாந்திடம் விசாரணையா? ஒருநபர் ஆணைய வக்கீல் பதில்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்தப்படுமா? என்பதற்கு ஒருநபர் விசாரணை ஆணைய வக்கீல் அருள் வடிவேல் சேகர் பதிலளித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இந்த விசாரணை அதிகாரி பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கனவே 13 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, 366 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் விசாரணை அதிகாரி அருணாஜெகதீசன் தலைமையில் 14-வது கட்ட விசாரணை கடந்த 27-ந் தேதி முதல் நேற்று வரை நடந்தது.
இதில் போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 28 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் 13 பேர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தனர். இதுவரை மொத்தம் 379 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஒருநபர் விசாரணை ஆணையத்தின் வக்கீல் அருள் வடிவேல் சேகர் கூறியதாவது:-
ஒருநபர் ஆணையத்தின் 14-வது கட்ட விசாரணை கடந்த 27-ந் தேதி தொடங்கி இன்று (அதாவது நேற்று) முடிவடைந்தது. இதில் 28 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 13 பேர் ஆஜரானார்கள். இதில் அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் நீண்ட நேரம் விசாரணை நடந்ததால் அதிக நபர்களிடம் விசாரணை நடத்த முடியவில்லை. இதுவரை ஆணையத்தில் 555 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
அடுத்த கட்டமாக அமைப்புகளை சேர்ந்தவர்கள், உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும். அதனை தொடர்ந்து போலீஸ் துறை, போலீசில் காயம் அடைந்தவர்கள், வருவாய்த்துறையினரிடம் விசாரணை நடத்தப்படும். ஆணையத்தின் காலத்தை அரசு பிப்ரவரி 2020 வரை நீட்டித்து உள்ளது. அதுவரை தொடர்ந்து விசாரணை நடைபெறும். உயர்நீதிமன்றத்தில் ஒருநபர் விசாரணை ஆணையம் தொடர்பான வழக்கு வந்தபோது, நேரில் ஆஜர் ஆனேன். அப்போது விசாரணை கமிஷன் இதுவரை மேற்கொண்டு உள்ள விசாரணை குறித்த அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், நடிகர் ரஜினிகாந்தை விசாரணைக்கு அழைப்பீர்களா? என்று வக்கீல் அருள் வடிவேல் சேகரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “தேவைப்பட்டால் இந்த சம்பவங்கள் குறித்த விவரங்கள் அறிந்தவர்களை அழைத்து விசாரணை நடத்துவோம்.
சமூக செயற்பாட்டாளர் முகிலன் சார்பில் ஒரு சி.டி. தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஆகையால் அவரிடம் விசாரணை நடத்துவோம்“ என்று கூறினார்.
Related Tags :
Next Story