கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் புதிய ரேஷன் கடை, பஸ் நிறுத்த கட்டிடம் திறப்பு விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு


கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் புதிய ரேஷன் கடை, பஸ் நிறுத்த கட்டிடம் திறப்பு விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு
x
தினத்தந்தி 31 Aug 2019 3:00 AM IST (Updated: 31 Aug 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் புதிய ரேஷன் கடை, பஸ் நிறுத்த கட்டிடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

கயத்தாறு,

கயத்தாறு அருகே திருமலாபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8½ லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். பின்னர் அவர், சவலாப்பேரியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர், சத்திரப்பட்டியில் புதிய சாலை அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில் ரூ.3½ லட்சம் செலவில் கட்டப்பட்ட பஸ் நிறுத்த கட்டிடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் அவர், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர், கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி முன்பு ரூ.3½ லட்சம் செலவில் கட்டப்பட்ட பஸ் நிறுத்த கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் கோவில்பட்டி லாயல் மில் காலனியில் ரூ.1 கோடியே 60 லட்சத்து 77 ஆயிரம் செலவில் 2 மாடிகளுடன் கட்டப்பட்டு திறக்கப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ குத்துவிளக்கு ஏற்றினார்.

விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, சின்னப்பன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதா, தாசில்தார்கள் மணிகண்டன் (கோவில்பட்டி), பாஸ்கரன் (கயத்தாறு), யூனியன் ஆணையாளர்கள் கிரி, மாணிக்கவாசகம் (கோவில்பட்டி), முத்துகுமார், சீனிவாசன் (கயத்தாறு), கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் மாரியப்பன், உதவி தொடக்க கல்வி அலுவலர் செல்ல குருசாமி,

நாடார் உறவின்முறை சங்க செயலாளர் ஜெயபாலன், எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி செயலாளர் கண்ணன், பொருளாளர் மகேஷ், கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியன், தலைமை ஆசிரியை செல்வி, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், கயத்தாறு ஒன்றிய செயலாளர் வினோபாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story