கிராப்பட்டி மேம்பாலத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் வாரச்சந்தை நடத்த தடை
திருச்சி கிராப்பட்டி மேம்பாலத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் வாரச்சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி கிராப்பட்டி-எடமலைப்பட்டிபுதூர் இடையே ரெயில்வே மேம்பாலம் கடந்த 2013-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், பாலம் பராமரிக்கப்படாமலேயே விடப்பட்டிருந்தது. கிராப்பட்டி மேம்பாலத்தின் கீழ் அப்பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கொட்டி வந்தனர். பொதுமக்களும் அங்கு குப்பைகளை கொட்டினர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று சாலையோர வியாபாரிகளால் அங்கு காய்கறி வியாபாரம் மற்றும் கடல் மீன் விற்பனை என அமோகமாக நடப்பது வழக்கம். இதேபோல் எடமலைப்பட்டிபுதூருக்கு செல்லும் பாலத்தையொட்டியுள்ள அணுகு சாலையில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடப்பது வழக்கம்.
இந்த நிலையில் கிராப்பட்டி மேம்பாலத்தின் கீழ் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறையினரால் ரூ.13 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவர் கட்டி வேலி அமைக்கும் பணி கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. தற்போது பணிகள் முழுமையாக நடந்து முடிந்து விட்டது. ஆனாலும், செவ்வாய்க்கிழமை தோறும் நடக்கும் வாரச்சந்தையால் சாலை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாகவும், பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளுக்கு இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும் காய்கறி வியாபாரம் முடிந்து செல்லும்போது கழிவுகளை சாலையோர வியாபாரிகள் விட்டுச்செல்வதாகவும், எனவே, வாரச்சந்தை நடத்த அனுமதிக்க கூடாது என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் மாவட்ட கலெக்டருக்கும், திருச்சி மாநகராட்சி ஆணையருக்கும் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற கடிதத்தை அனுப்பினர்.
அதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று வாரச்சந்தை நடப்பதை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின்படி, கிராப்பட்டி மேம்பாலத்தின் கீழ் உள்ள அணுகுசாலையில் செவ்வாய்க்கிழமை தோறும் சாலையோர வியாபாரிகளால் நடத்தப்படும் வாரச்சந்தைக்கு தடை விதித்து கலெக்டர் சிவராசு உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமையன்று அங்கு வாரச்சந்தை நடத்தப்படவில்லை. ஆனால் மேம்பாலம் இறங்கும் எடமலைப்பட்டிபுதூர் அணுகுசாலையில் வியாழக்கிழமை தோறும் நடக்கும் வாரச்சந்தை வழக்கம்போல நடந்தது. தடை விதிக்கப்பட்ட வாரச்சந்தையை பொதுவான ஒரு மைதானத்தில் நடத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story