ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த, ராணுவ வீரரின் உடலை உடனே ஒப்படைக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்


ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த, ராணுவ வீரரின் உடலை உடனே ஒப்படைக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 31 Aug 2019 4:30 AM IST (Updated: 31 Aug 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை உடனே ஒப்படைக்கக்கோரி ஜெயங்கொண்டத்தில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணாநகரை சேர்ந்தவர் ரத்தினம். இவர் ஜெயங்கொண்டம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மற்ற அனைவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இவரது இளைய மகன் வீரமணி(வயது 32) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. இவரது மனைவி ரீனாதேவி சென்னை ஆவடியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் டெல்லி தலைமையிடத்து ராணுவத்தில் பணியாற்றிய வீரமணி சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டபோது பாதுகாப்பு பணிக்காக ஜம்மு காஷ்மீரிருக்கு இடம் மாற்றம் செய்து அனுப்பப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணுவ வீரர்கள் சிலர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு அவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் வீரமணி உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டு டெல்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை அடையாளம் காணும் வகையில் அவரது உறவினர்கள் டில்லிக்கு சென்று நேற்று மாலை அந்த உடல் வீரமணியின் தான் என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊரான ஜெயங்கொண்டத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது. இதில் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு தாமதமானது. மேலும் ராணுவத்திலிருந்து தடையின்மை சான்று வழங்க தாமதமானது. மேலும் உடல் மிக அதிகமாக சேதமடைந்ததால் விமானத்தில் அனுப்ப இயலாது என ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆம்புலன்சில் தான் ஜெயங்கொண்டம் கொண்டு செல்ல வேண்டும். உடன் 2 ராணுவ அதிகாரிகளும், உறவினர்களும் செல்வார்கள் என ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் ஜெயங்கொண்டத்தில் வீரமணியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக வீரமணி உடலை ஒப்படைக்க வலியுறுத்தி ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, டெல்லி சென்றிருக்கும் உறவினர்களிடமும், அங்குள்ள அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அங்குள்ள நிலைமையை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தனர். இதனால் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். வீரமணியின் உடல் ஜெயங்கொண்டம் வருவதற்கு 2 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் கூறியதாக போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தார். இந்த சாலை மறியலால் ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story