கைது செய்ய தடை கோரிய மனு கோர்ட்டில் தள்ளுபடி: டெல்லி அமலாக்கத்துறையில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார்


கைது செய்ய தடை கோரிய மனு கோர்ட்டில் தள்ளுபடி: டெல்லி அமலாக்கத்துறையில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார்
x
தினத்தந்தி 31 Aug 2019 5:00 AM IST (Updated: 31 Aug 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

டெல்லிக்கு சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் ஆஜரானார். அப்போது அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.

பெங்களூரு,

அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை கோரிய முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரின் மனு கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து டெல்லிக்கு சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் ஆஜரானார். அப்போது அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8.50 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை கடந்த பிப்ரவரி மாதம் சம்மன் அனுப்பியது.

அமலாக்கத்துறை அனுப்பியுள்ள இந்த சம்மனை ரத்து செய்ய கோரி டி.கே.சிவக்குமார் சார்பில் தாக்கல் செய்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை சார்பில் டி.கே.சிவக்குமாருக்கு நேற்று முன்தினம் புதிய சம்மன் வழங்கப்பட்டது. அதில் 30-ந் தேதி(அதாவது நேற்று) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் டி.கே.சிவக்குமாருக்கு கைது பயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து டி.கே.சிவக்குமார் சார்பில், அமலாக்கத்துறை அவரை கைது செய்ய தடை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி அரவிந்த்குமார், இடைக்கால முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். அதோடு டி.கே.சிவக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதுபோல் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரிய மனு மீது வழங்கப்பட்ட தீர்ப்பிலும் திருத்தம் செய்ய முடியாது என்று நீதிபதி கூறினார்.

அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை ஆஜராவதற்காக டி.கே.சிவக்குமார் நேற்று மதியம் 1 மணியளவில் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, எப்போதும் பழிவாங்கும் அரசியல் செய்தது இல்லை. ஆனால் சட்டசபையில் முதல்-மந்திரி எடியூரப்பா, பழிவாங்கும் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று கூறிவிட்டு, இப்போது அதை செய்து கொண்டிருக்கிறார்.

கர்நாடகத்தில் ஆபரேஷன் தாமரை மூலம் எத்தனையோ பேரங்கள் நடந்துள்ளன. சட்டசபையில் சீனிவாசகவுடா எம்.எல்.ஏ., தனக்கு பா.ஜனதாவினர் ரூ.5 கோடி கொடுத்து பா.ஜனதாவுக்கு வருமாறு அழைத்தனர் என்று பகிரங்கமாக புகார் கூறினார். இந்த விஷயத்தில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஏன் நோட்டீசு அனுப்பவில்லை?. இந்த விசாரணை அமைப்புகள் பாரபட்சமாக நடந்து கொள்வது ஏன்?.

நான் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தபோது, எடியூரப்பா உள்பட பா.ஜனதா தலைவர்கள் கேட்ட உதவிகளை செய்து கொடுத்துள்ளேன். மாநிலத்தின் வளர்ச்சியில் பாரபட்சம் இன்றி நடுநிலையாக செயல்பட்டேன். எங்கள் ஆட்சியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உள்ள தொகுதிகளின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. நாங்கள் பாரபட்சம் பார்க்கவில்லை.

எடியூரப்பா இவ்வாறு செயல்படுவார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. கனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். குமாரசாமி ஆட்சியில் அதற்கான இடம் ஒதுக்கப்பட்டது. மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையும் நடத்தப்பட்டது.

ஆனால் கூட்டணி ஆட்சியில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளுக்கும் எடியூரப்பா தடை விதித்துள்ளார். இதன் மூலம் எடியூரப்பா பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டுள்ளார். மருத்துவ கல்லூரி அமைக்கும் விஷயத்தில் அரசு தனது முடிவை கைவிடாவிட்டால் நாங்கள் தீவிர போராட்டம் நடத்துவோம். எங்களை கைது செய்தாலும் பரவாயில்லை, இந்த விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.

குஜராத், மராட்டிய மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கர்நாடகத்தில் தங்க வைத்து அவர்களை பாதுகாக்கும் பணியை செய்தேன். இதனால் எனது வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. நீதிமன்றத்தை மதிக்கிறேன். எனக்கு பலமுறை விசாரணை அமைப்புகள், நோட்டீசுகள் அனுப்பி உள்ளன. அவற்றுக்கு உரிய பதிலை அளித்துள்ளேன்.

எங்கள் பெற்றோர் சம்பாதித்த சொத்துகளை, பினாமி சொத்து என்று வருமான வரித்துறை சொல்கிறது. அந்த சொத்துகளை வருமான வரித்துறை கைப்பற்றி வைத்துள்ளது. இதற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். எனது தாயாருக்கு தேவையானதை செய்து கொடுத்தது தவறா?.

கனகபுராவில் உள்ள எனது வீட்டையும் பினாமி சொத்து என்று கூறுகிறார்கள். நான் வருமான வரியை முறைப்படி செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறினேன். எனக்கு எதிரான சதியை சட்டப்படியும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வேன். நான் எந்த தவறையும் செய்யவில்லை. கொலையோ, கற்பழிப்போ செய்யவில்லை.

லஞ்சம் பெறவில்லை. நேர்மையான முறையில் தொழில் செய்து பணம் சம்பாதித்தேன். அனைத்து வகையான விசாரணைகளையும் சட்டப்படி சந்திப்பேன்”. இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.

டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு நேற்று மதியம் 1.30 மணிக்குள் ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் நேற்று மாலை 6 மணியளவில் தான் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் ஆஜரானார்.

அவரிடம் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார். அப்போது கணக்கில் வராத ரூ.8.50 கோடி ரொக்கம் உங்களுக்கு எப்படி வந்தது என்பது குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அமலாக்கத்துறை அதிகாரிகள் விவரங்களை பெற்றனர்.

டி.கே.சிவக்குமாருடன் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி., அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் செல்ல முயற்சி செய்தார். ஆனால் அவரை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தார். இந்த விசாரணையையொட்டி அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு மத்திய போலீஸ் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Next Story