காஷ்மீரில் வசித்து வரும் எனது மாமனார், மாமியாரை 22 நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை நடிகை ஊர்மிளா வேதனை


காஷ்மீரில் வசித்து வரும் எனது மாமனார், மாமியாரை 22 நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை நடிகை ஊர்மிளா வேதனை
x
தினத்தந்தி 31 Aug 2019 4:17 AM IST (Updated: 31 Aug 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் வசித்து வரும் எனது மாமனார், மாமியாரை கடந்த 22 நாட்களாக எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று நடிகை ஊர்மிளா மடோங்கர் கூறினார்.

மும்பை,

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

தற்போது படிப்படியாக அங்கு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நடிகையும், அரசியல்வாதியுமான ஊர்மிளா மாடோங்கர் மத்திய அரசு மீது குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

என் மாமனார் மற்றும் மாமியார் காஷ்மீரில் இருக்கிறார்கள். இருவரும் நீரிழிவு நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள். இன்றுடன் 22 நாள் ஆகிறது. நானோ, என் கணவரோ அவர்களிடம் பேச முடியவில்லை. தாய், தந்தையை தொடர்பு கொள்ள முடியாமல் எனது கணவர் தவிக்கிறார். அவர்களுக்கு வீட்டில் மருந்துகள் இருந்ததா, இல்லையா என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை.

370-வது சட்டப்பிரிவை ரத்து செய்த விதம் மனிதாபிமானமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை ஊர்மிளா மடோங்கர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மும்பையில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். இந்தி நடிகையான இவர், தமிழில் இந்தியன் படத்தில் நடித்து இருக்கிறார்.

Next Story