புயல் பாதிப்புகளில் இருந்து மீளமுடியாத நிலையில் உள்ளதால், கடன் செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும்


புயல் பாதிப்புகளில் இருந்து மீளமுடியாத நிலையில் உள்ளதால், கடன் செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும்
x
தினத்தந்தி 30 Aug 2019 10:30 PM GMT (Updated: 30 Aug 2019 11:37 PM GMT)

புயல் பாதிப்புகளில் இருந்து மீளமுடியாத நிலையில் உள்ளதால் கடன் செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி வலியுறுத்தினார்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமை தாங்கி, வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் எந்திரமாக்கும் திட்டம் குறித்த விளக்க கையேட்டை விவசாயிகளுக்கு வழங்கினார். கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சுப்பையா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அருணாச்சலம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மிருனாளிணி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயி சுப்பையா பேசுகையில், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கு தீர்ப்பு வரும் வரை தைல மரக்கன்றுகளை நடமாட்டோம் என வனத்தோட்ட கழகத்திடம் இருந்து கலெக்டர் உத்தரவாதத்தை பெற்ற பிறகும்கூட தொடர்ந்து கன்றுகள் நடப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கும் மேல் பராமரிக்கப்படாத ஏரிகளை ஏன் குடிமராமத்து திட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை?. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆவுடையார்கோவில் பகுதியில் விடுபட்டு உள்ள 200 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடுக்கான இழப்பீடு தொகை ரூ.1 கோடியை வழங்குமாறு அண்மையில் கலெக்டரிடம், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு அறிவுறுத்தியும்கூட ஏன் இழுத்தடிக்கப்படுகிறது என்றார்.

விவசாயி தனபதி பேசுகையில், அனைத்து துறையின் மாவட்ட நிலையிலான அலுவலர்கள் வராமல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துவதில் பிரயோஜனம் இல்லை. அண்டக்குளத்தில் புதிய துணை மின் நிலையம் அமைக்க பல மாதங்களாக நிலம் ஒதுக்கித்தராமல் வருவாய் துறை இழுத்தடிக்கிறது. கடந்த காலங்களில் கொடுக்கப்பட்ட ஏராளமான மனுக்கள் தீர்வு இல்லாமல் கிடப்பிலே இருப்பதும், அதேநிலை மேலும் தொடர்வதாலும் இக்கூட்டத்தின் மீது விவசாயிகளுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டு உள்ளது. இதை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என்றார்.

விவசாயி காமராஜ் பேசுகையில், புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்துக்கு இழப்பீடாக தலா ரூ.1,100 வீதம் வழங்கப்பட்டது. மீதம் உள்ள ரூ.400 எப்போது வழங்கப்படும். புயல் பாதிப்புகளில் இருந்து இன்னும் யாரும் மீளமுடியாத நிலையில் உள்ளதால் கடன் செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண் டும். கீரமங்கலம் பகுதியில் முந்திரியை அழித்துவிட்டு, தைலமரக்கன்றுகளை நட்டால் போராட்டம் வெடிக்கும் என்றார்.

விவசாயி துரைமாணிக்கம் பேசுகையில், மழைநீரை தேக்கி வைத்து பாசனம் மேற்கொள்ளக்கூடிய திருப்புனவாசல், ஆவுடையார்கோவிலில் உள்ள அணைக்கட்டுகளில் பழுதடைந்து உள்ள சட்டர்களை பழுது நீக்குவதோடு ஏரிகளையும் தூர்வார வேண்டும் என்றார்.

விவசாயி மிசா.மாரிமுத்து பேசுகையில், தற்போது 3-வது தலைமுறையாக காவிரிகுண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி வருகிறோம். நாட்களை கடத்தாமல் திட்டத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றார்.

விவசாயி அத்தாணி ராமசாமி பேசுகையில், காவிரி நீர் வரக்கூடிய கால்வாய்களில் புயலுக்கு சாய்ந்த மரங்களை வனத்துறை அகற்றாமல் வைத்து உள்ளது. இதனால் கடைமடைக்கு தண்ணீர் செல்லவில்லை. கல்லணை கால்வாயை பலப்படுத்தி 4 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடக்கோரி தற்போது ஒரு வழக்குதான் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் 168 ஏரி பாசனத்தாரர்களும் தனித்தனியே வழக்கு தொடரும் நிலை ஏற்படும்.

தொடர்ந்து விவசாயிகள் பலர் பேசினார்கள்.

முன்னதாக தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, அவற்றை விற்பனை செய்வதற்கான தள்ளுவண்டிகளை மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி வழங்கினார்.

Next Story