மண்டபம் கடலில் தரைதட்டி நின்ற கடலோர காவல் படை கப்பல் மீட்பு


மண்டபம் கடலில் தரைதட்டி நின்ற கடலோர காவல் படை கப்பல் மீட்பு
x
தினத்தந்தி 31 Aug 2019 5:15 AM IST (Updated: 31 Aug 2019 5:15 AM IST)
t-max-icont-min-icon

மண்டபம் கடலில் இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல் தரைதட்டி நின்றது. அந்த கப்பல் மீனவர்கள் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இந்திய கடலோர காவல் படை நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு கடல் ரோந்து பணிக்காக 5 ஹோவர் கிராப்ட் கப்பல்களும், 2 அதிவேக கப்பல்களும் உள்ளன. இதை தவிர 2 சிறிய ரக ரோந்து படகுகளும் உள்ளன.

இந்த கப்பல்கள், படகுகள் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வை-ளைகுடா கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மண்டபம் கடலோர காவல் படை நிலையத்துக்கு சொந்தமான சி-432 என்ற அதிவேக கப்பல் பாக்ஜலசந்தி கடலில் ரோந்து சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு மண்டபம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

கப்பல் வரும் பாதையில் வழக்கத்திற்கு மாறாக கடல் நீர்மட்டம் திடீரென குறைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆழம் குறைந்து, அந்த கப்பலானது கரை நெருங்கிய போது சற்று தொலைவில் எதிர்பாராத விதமாக தரை தட்டி நின்றது. கப்பலை அங்கிருந்து உடனடியாக நகர்த்துவதற்கு இந்திய கடலோர காவல் படையினர் மேற்கொண்ட முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை.

அதை தொடர்ந்து ரோந்து கப்பலை மீட்கும் பணி நேற்று காலையில் நடந்தது. மண்டபத்தில் உள்ள மீனவர்களின் 2 விசைப்படகுகள் உதவியுடன் கயிறு கட்டி பாதுகாப்பாக இழுத்து மீட்டனர். தொடர்ந்து அந்த கப்பலானது கடலோர காவல்படை நிலையத்தில் உள்ள கப்பல் நிறுத்தும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. தரை தட்டியதில் கப்பலுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இதனால் கடலோர காவல்படையினர் நிம்மதி அடைந்தனர்.

Next Story