ஓட்டல்களில் அரைகுறை நிர்வாண நடனம் அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


ஓட்டல்களில் அரைகுறை நிர்வாண நடனம் அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 31 Aug 2019 5:23 AM IST (Updated: 31 Aug 2019 5:23 AM IST)
t-max-icont-min-icon

புதுவை ஓட்டல்களில் அரைகுறை நிர்வாண நடனம் நடப்பதாக அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுப்பிய பிரச்சினையும் அதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி அளித்த பதிலும் வருமாறு:-

அன்பழகன்: புதுவை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தங்குதடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன. கஞ்சா பழக்கத்திற்கு ஆளாக்கப்பட்ட இளைஞர்கள் பணத்திற்காக கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது. அதை விற்பவர்கள் யார்? என்பது போலீசாருக்கு தெரியும். கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசிடம் என்ன சட்டம் உள்ளது?

கோவா போன்ற பல சுற்றுலா நகரங்களில் கூட குறிப்பிட்ட பகுதியில் ஆண்களும், பெண்களும் அரைகுறை ஆடையுடன் இருக்க அனுமதிக்கப்படுவர். ஆனால் புதுச்சேரியில் அந்த நிலை இல்லை. பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளிலும் நகரின் பிரதான சாலைகளிலும் இவர்கள் அரைகுறை கால்சட்டையோடு சுற்றி திரிகின்றனர்.

சுற்றுலாவிற்காக வரும் பயணிகள் அனைத்து தவறுகளையும் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களை மகிழ்விக்க ஓட்டல்களில் அரைகுறை நிர்வாண நடனம் நடத்தப்படுகிறது. ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால் புதுவை மாநிலம் செக்ஸ் சுற்றுலா பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

கலாசார சீரழிவும் ஏற்படுகிறது. அடுத்த தலைமுறை இளைஞர்களை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் இதுபோன்ற தவறான செயல்களை அரசு தடுக்க வேண்டாமா?

நாராயணசாமி: கஞ்சா, ஆன்லைன் லாட்டரியை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கள்ள லாட்டரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்டுக்குள் வந்துள்ளது. ரெயில் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாயிலாக விழுப்புரம் பகுதியில் இருந்து கஞ்சா வருகிறது. லாஸ்பேட்டை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா பிடிபட்டுள்ளது. இதனை விற்க சிறுவர்களையும் பயன்படுத்துகிறார்கள். கஞ்சா விற்பவர்களை பிடிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விழுப்புரத்தை சேர்ந்த ஒரு பெண்மணி இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் திருபுவனை பகுதியிலும் கஞ்சா பிடிபட்டுள்ளது. கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story