ரூ.3¼ கோடியில் புதிய கட்டிடம்: புத்தூர் மீன்மார்க்கெட் விரைவில் இடமாற்றம்


ரூ.3¼ கோடியில் புதிய கட்டிடம்: புத்தூர் மீன்மார்க்கெட் விரைவில் இடமாற்றம்
x
தினத்தந்தி 30 Aug 2019 10:45 PM GMT (Updated: 30 Aug 2019 11:54 PM GMT)

திருச்சி புத்தூரில் செயல்படும் மீன் மார்க்கெட் விரைவில் இடமாற்றம் செய்யப்படுகிறது. மீன் மார்க்கெட்டுக்காக ரூ.3¼ கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.

திருச்சி,

திருச்சி புத்தூரில் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பகுதியில் மீன் மார்க்கெட் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு மீன்கள் மட்டுமின்றி ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி மற்றும் காய்கறி கடைகள் என 50-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. மீன் மார்க்கெட்டுக்கு நாகை, வேதாரண்யம் ஆகிய கடல்களில் பிடிக்கப்படும் மீன்கள் லாரிகள் மூலம் தினமும் கொண்டு வரப்பட்டு அதிகாலை முதல் வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பது வழக்கம். முதலில் இங்கு காய்கறிகள் மட்டுமே விற்கப்பட்டு வந்தன. பீமநகர் காலனியில் செயல்பட்டு வந்த மீன்கடைகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு புத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அந்த கால கட்டத்தில் மீன்மார்க்கெட்டை சுற்றி அதிக அளவில் குடியிருப்புகள் இல்லாமல் இருந்தது. நாளடைவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. தற்போது குடியிருப்புகளுக்கு மத்தியில் மீன்மார்க்கெட் அமைந்து விட்டதுபோல காணப்படுகிறது.

மீன் மார்க்கெட் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மீன் மார்க்கெட்டில் உள்ள கழிவுகள் சாலையில் கொட்டப்படுவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மீன் மார்க்கெட்டை புத்தூரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடம் இருந்து எழுந்தது.

இதையடுத்து உறையூர் குழுமணி ரோட்டில் உள்ள காசு விழுங்கி பாலம் அருகில் புதிய மீன் மார்க்கெட் கட்ட மாநகராட்சி நிர்வாகத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவெடுக்கப்பட்டது. அதன் பின்னர், அத்திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அந்த இடத்தில் புதிதாக மீன் மார்க்கெட் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 23 சில்லறை விற்பனை கடைகளும், 6 மொத்த விற்பனை கடைகளும் கட்டப்பட இருக்கின்றன. இதற்கான டெண்டர் விடும் பணிகளுக்கு ஏற்பாடு நடந்து வருகிறது. எனவே, விரைவில் புத்தூர் மீன் மார்க்கெட் மூடப்படுவது உறுதியாகி விட்டது.

புத்தூர் மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்த பின்னர், அங்கு நவீன வணிக வளாகம் அமைய இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.20 கோடியே 20 லட்சம் மதிப்பில் அமைய உள்ள இந்த வணிக வளாகத்தின் தரைத்தளம் 10,250 சதுர அடியிலும், 3 மேல் தளங்களுடனும் அமைய உள்ளன. 53 கார்கள், 128 இருசக்கர வாகனங்கள் தரைத்தளத்தில் நிறுத்தும் வகையில் வசதி செய்யப்படுகிறது. முதல் 2 தளங்கள் சில்லறை விற்பனை கடைகளுக்காக ஒதுக்கப்படுகிறது. உணவு பரிமாறும் இடம் மற்றும் விழாக்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையிலான அரங்கம் ஆகியவையும் அமைகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட உள்ள நவீன வணிக வளாகம் கட்டும் பணிக்கான டெண்டர் விடும் நடவடிக்கை நடந்து வருவதாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Next Story