வத்திராயிருப்பு அருகே அருந்ததியர் சமுதாய பெண்கள் பெயரில் கடன் வாங்கி மோசடி - போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்


வத்திராயிருப்பு அருகே அருந்ததியர் சமுதாய பெண்கள் பெயரில் கடன் வாங்கி மோசடி - போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
x
தினத்தந்தி 31 Aug 2019 5:26 AM IST (Updated: 31 Aug 2019 5:26 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரத்தில் அருந்ததியர் சமுதாய பெண்கள் பெயரில் கடன் பெற்று மோசடி செய்ததாக அதே ஊரை சேர்ந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

வத்திராயிருப்பு சேதுநாராயணபுரம் அருந்ததியர் தெருவை சேர்ந்த பாண்டியம்மாள், உமா மற்றும் 9 பேர் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊரை சேர்ந்த ராஜகுரு என்பவரின் மனைவி பாண்டிச்செல்வி எங்களுக்கு கடன் பெற்று தருவதாக கூறி ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம். கார்டு போன்ற ஆவணங்களை பெற்றுக்கொண்டு கடன் வாங்கி கொடுத்தார். நாங்கள் கடன் தொகையை சரியாக செலுத்தி வருகிறோம்.

இந்த நிலையில் அவர் நாங்கள் கொடுத்த அனைத்து ஆவணங்களையும் அவரே வைத்துக்கொண்டு எங்கள் பெயரில் தனியார் நிறுவனங்களிலும், சுய உதவிக்குழுக்களிலும் கடன் பெற்றுள்ளார். எங்களுக்கு இது தெரியாது. ஆனால் தற்போது அவர் பணத்தை கட்ட முடியாத நிலைக்கு வந்தவுடன் நிதி நிறுவனத்தினர் எங்களை பணம் கட்ட சொல்லி வற்புறுத்துகின்றனர்.பணத்தை கட்டவில்லை என்றால் வீட்டின் வாசலில் உட்கார்ந்து கொண்டு மிரட்டி வருகின்றனர். பெண்களை கடத்தி சென்று விடுவதாகவும், அவமானப்படுத்தி விடுவதாகவும் தகாத வார்த்தைகளால் பேசி மனஉளைச்சலை ஏற்படுத்துகின்றனர். நாங்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். இதுபற்றி பாண்டிசெல்வியிடம் கேட்டதற்கு நான் கடன் பெற்றது உண்மைதான் என்றும், ஆனால் திருப்பி கட்ட முடியாது என்றும் கூறுகிறார். மேலும் இழிவாக பேசுகிறார்.

நள்ளிரவு வரை தெருவில் உட்கார்ந்து கொண்டு எங்களை வீட்டுக்கு செல்ல முடியாதபடி தடுக்கின்றனர்.

எனவே பாண்டிசெல்வி மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களை இந்த பிரச்சினையில் இருந்து விடுவிக்க உதவி செய்யுமாறு வேண்டுகிறோம்.

பாண்டிசெல்வி இதேபோன்று மற்ற சமுதாயத்தை சேர்ந்த பெண்களிடமும் மோசடி செய்துள்ளார். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story