சிங்கம்புணரியில் குளத்து நீரில் கழிவுகள் கலப்பதால் தொற்று நோய் அபாயம்


சிங்கம்புணரியில் குளத்து நீரில் கழிவுகள் கலப்பதால் தொற்று நோய் அபாயம்
x
தினத்தந்தி 31 Aug 2019 5:34 AM IST (Updated: 31 Aug 2019 5:34 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் உள்ள நல்லாகுளத்தில் கழிவுகள் கலப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி பஸ்நிலையம் அருகில் செல்வ விநாயகர் கோவில் தெரு மற்றும் வாத்தியார் ஐயா கோவில் பின்புறம் உள்ள நல்லாகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் குளங்கள், நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. நல்லாகுளத்தின் கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றி திரிகின்றன. இதன் கழிவுகள் நல்லாகுளத்தின் நீரில் கலந்து விடுவதால் குளம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் இந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் குடிமராமத்து பணி மூலம் குளத்திற்கு தண்ணீர் வர ஏற்பாடுகள் நடைபெற்று வரும் வேளையில் இந்த பகுதியில் பன்றிகளால் சுகாதாரம் கேள்விகுறியாகி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- குளங்கள் ஏரிகள் தூர் வாரப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மாவட்ட நிர்வாகத்தின் தீவிர முயற்சியால் இந்த பகுதியில் நீர் நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு தூர் வாரும் பணிகள், குடிமரா மத்து பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் பல வருடங்களாக நல்லாகுளம் பகுதியில் ஏராளமான பன்றிகள் உள்ளன. தற்போது நீர்நிலையை உயர்த்த குளம்தூர் வாரப்பட்டு வருகிறது.

தற்போது அதில் கழிவுகள் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், இந்த பகுதி பொதுமக்கள் தொற்று நோய் பாதிப்பால் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்த விஷயத்தை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இந்த பகுதியில் கோவில்கள் கடைகள், வணிக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதால் அங்கு வருபவர்களுக்கும் கழிவுகளின் துர்நாற்றத்தால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் இந்த பன்றிகள் குடியிருப்பு பகுதிகளான நேதாஜி நகர், வடக்கு வேளார் தெரு, அண்ணா நகர், குறிஞ்சி நகர் மற்றும் ஆசிரியர் காலனி போன்ற இடங்களில் சுற்றி திரிவதால் அந்த பகுதி மக்களுக்கும் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் பன்றிகளை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story