இலங்கையை சேர்ந்தவர்களை விடுவித்த விவகாரம்: 2 வாலிபர்களும் வெளிநாட்டினர் என்பதை கவனத்தில் கொள்ளாதது ஏன்? புழல் சிறை கண்காணிப்பாளரிடம், ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி


இலங்கையை சேர்ந்தவர்களை விடுவித்த விவகாரம்: 2 வாலிபர்களும் வெளிநாட்டினர் என்பதை கவனத்தில் கொள்ளாதது ஏன்? புழல் சிறை கண்காணிப்பாளரிடம், ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி
x
தினத்தந்தி 31 Aug 2019 5:41 AM IST (Updated: 31 Aug 2019 5:41 AM IST)
t-max-icont-min-icon

“இலங்கையை சேர்ந்த 2 வாலிபர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட விவகாரத்தில், அந்த 2 வாலிபர்களும் வெளிநாட்டினர் என்பதை கவனத்தில் ஏன் கொள்ளவில்லை?” என்று புழல் சிறை கண்காணிப்பாளரிடம் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மதுரை,

இலங்கையில் கொழும்பு நகரைச் சேர்ந்த வாலிபர்கள் சங்க சிரந்தா, முகமது சப்ராஸ். இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் தஞ்சம் அடைந்ததால் ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை போலீசார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அவர்கள் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கோரி மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, அவர்கள் மீதான குற்றச்சாட்டை திரும்ப பெறுவதாக கேணிக்கரை போலீசார் ராமநாதபுரம் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

அந்த மனு அடிப்படையில் அவர்களை விடுவித்து மாஜிஸ்திரேட்டு கடந்த 13-ந்தேதி உத்தரவிட்டார். அந்த உத்தரவை புழல் சிறை கண்காணிப்பாளருக்கு கேணிக்கரை போலீசார் அனுப்பிவைத்தனர். அதை ஜாமீனில் விடுவிக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதாக கருதிய சிறை அதிகாரிகள், இலங்கை வாலிபர்களை கடந்த 18-ந்தேதி விடுவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவானார்கள்.

இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டில் அவர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் விடுவிக்கப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டது. எந்த அடிப்படையில் அவர்களை விடுவித்தனர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன், புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா, கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.

அவர்கள் சார்பிலும், உள்நாட்டு பாதுகாப்பு டி.ஐ.ஜி. சார்பிலும் இந்த வழக்கு தொடர்பாக தனித்தனியாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது, புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த 2 வாலிபர்களை தேடுவதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே வெளிநாட்டினரை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தால், அவர்களை வெளியில் விடுவது குறித்த வழிமுறைகள் தொடர்பான மனுவை மனுதாரர் தரப்பு வக்கீல் தாக்கல் செய்தார்.

பின்னர், “ராமநாதபுரம் மாஜிஸ்திரேட்டு உத்தரவை, ஜாமீனில் வெளியில் விட வேண்டும் என்று தவறாக புரிந்து இருந்தாலும், அவர்கள் வெளிநாட்டுக்காரர்கள் என்பதை கவனத்தில் கொள்ளாதது ஏன்? அவர்களை சிறையில் இருந்து விடுவிப்பதற்கு முன்பு கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டுவிடம் தகவல் தெரிவிக்காதது ஏன்?” என்று புழல் சிறை கண்காணிப்பாளரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

விசாரணை முடிவில், இலங்கை வாலிபர்களை பிடிக்க எடுத்து வரும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story