போதிய மழையின்றி பாலமேடு சாத்தியாறு அணை வறண்டது


போதிய மழையின்றி பாலமேடு சாத்தியாறு அணை வறண்டது
x
தினத்தந்தி 31 Aug 2019 10:45 PM GMT (Updated: 31 Aug 2019 12:49 PM GMT)

போதிய மழை பெய்யாததால் மதுரையை அடுத்த பாலமேட்டில் உள்ள சாத்தியாறு அணை வறண்டு போனது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

அலங்காநல்லூர்,

மதுரையை அடுத்த பாலமேடு கிராமத்தில் சாத்தியாறு அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 29 அடியாகும். இந்த அணை வகுத்து மலை, செம்பூத்துகரடு, சிறுமலை தொடர்ச்சி மற்றும் மஞ்சமலையினால் சூழ்ந்து அமைந்துள்ளது. இந்த அணையின் பாசனத்தை நம்பி பாலமேடு, ஆதனூர், எர்ரம்பட்டி, கீழசின்னணம்பட்டி, சுக்காம்பட்டி, அய்யூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயம் நடைபெறும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழையின்றி அணையில் தண்ணீர் குறைந்து காணப்பட்டது. மேலும் பருவமழை அவ்வப்போது ஏமாற்றியதால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் போனது. இதனால் விவசாயிகளும் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் தவியாய் தவிக்கும் சூழல் ஏற்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாமல் பொய்த்துவிட்டது. மேலும் அவ்வப்போது வெப்ப சலனத்தின் காரணமாக குறைந்த அளவே மழை பெய்தது. இதனால் சாத்தியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாமல் போனது. தற்போது அணைப்பகுதி முழுவதும் தண்ணீரின்றி வறண்ட நிலையில் காணப்படுகிறது. வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை சரியாக பெய்தால் தான் இனிமேல் அணையின் நீர்மட்டம் உயரும் என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல் காரணமாக ஒரே நாளில் சாத்தியாறு அணை நிரம்பியது. ஆனால் இந்த ஆண்டு மழை அளவு குறைந்ததால் தற்போது 1 அடி கூட தண்ணீரின்றி அணைப்பகுதி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், இப்பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாததால் அணைக்கு உட்பட்ட 10 கிராம கண்மாய் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story