மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 23,581 மனுக்கள் - சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனர் தகவல்


மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 23,581 மனுக்கள் - சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 31 Aug 2019 10:45 PM GMT (Updated: 31 Aug 2019 4:26 PM GMT)

திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மூலம் இதுவரை 23 ஆயிரத்து 581 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனர் வெங்கடாச்சலம் தகவல் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் தொடர்பான அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுகூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் இயக்குனர் வெங்கடாச்சலம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனர் பேசும்போது கூறியதாவது:-

தமிழக அரசு அறிவித்த முதல்-அமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மூலம் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, திருப்பூர் மாநகராட்சி மற்றும் பிற துறைகள் சார்ந்த அலுவலர்கள் கொண்ட குழுவினர் மூலம் கடந்த 22-ந்தேதி முதல் பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 30-ந்தேதி வரை திருப்பூர் வடக்கு வட்டத்தில் 2 ஆயிரத்து 42 மனுக்களும், தெற்கு வட்டத்தில் 1764 மனுக்களும், அவினாசியில் 1871 மனுக்களும், பல்லடத்தில் 2 ஆயிரத்து 683 மனுக்களும், ஊத்துக்குளியில் 1347 மனுக்களும், தாராபுரத்தில் 3 ஆயிரத்து 401 மனுக்களும், காங்கேயத்தில் 3 ஆயிரத்து 402 மனுக்களும், உடுமலையில் 5 ஆயிரத்து 417 மனுக்களும், மடத்துக்குளத்தில் 1654 மனுக்கள் என சுமார் 23 ஆயிரத்து 581 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது தொடர்புடைய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் திட்டங்களை அனைத்து தரப்பினருக்கும் சென்று சேரும் வகையில், அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், தாராபுரம் சப் கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், ஆர்.டி.ஓ.க்கள் செண்பகவள்ளி(திருப்பூர்), இந்திரவள்ளி(உடுமலை), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சாகுல் ஹமீது, உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியம், வேளாண்மை துறை இணை இயக்குனர் மனோகரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி, சமூக பாதுகாப்புத்திட்டத்தின் தனித்துணை கலெக்டர்(பொறுப்பு)சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story