கீழடி 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி ஒரு மாதத்தில் நிறைவு பெறும் - தொல்லியல் ஆணையர் உதயசந்திரன் பேட்டி


கீழடி 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி ஒரு மாதத்தில் நிறைவு பெறும் - தொல்லியல் ஆணையர் உதயசந்திரன் பேட்டி
x
தினத்தந்தி 1 Sept 2019 4:45 AM IST (Updated: 31 Aug 2019 10:35 PM IST)
t-max-icont-min-icon

கீழடியில் நடைபெற்று வரும் 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவு பெறும் என்று மாநில தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் கூறினார்.

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் கீழடி ஊராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. தற்சமயம் நடைபெற்று வரும் 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை மாநில தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விவசாயி நீதி என்பவரது நிலத்தில் கிடைத்த சுடுமண் குழாயை பார்வையிட்டதுடன், இது சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவ-மாணவிகளை பாராட்டினார். அவரிடம், சூது பவளம், வெள்ளி காசு, செப்பு காசுகள் உள்ளிட்ட பொருட்களை மாணவ-மாணவிகள் காண்பித்தனர்.

அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஆணையர் உதயசந்திரன் கூறியதாவது:-

கீழடியில் நடைபெற்று வரும் 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் இன்னும் ஒரு மாத காலத்தில் நிறைவு பெறும்.

இதுவரை நடைபெற்ற ஆராய்ச்சிகளை விட தற்போது நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் புதிதாக அரிய வகை பொருட்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக இரட்டைச்சுவர், தண்ணீர் தொட்டி, பெரிய பானைகள், உறைகிணறுகள் உள்ளிட்டவற்றை கூறலாம். அகழ்வாராய்ச்சியின் மூலம் சங்ககால தொன்மையை அறிய முடிகிறது.

ஏற்கனவே நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு, அதன் முடிவுகள் பெறப்பட்டு வருகிறது. இது குறித்து முழு ஆய்வறிக்கை வந்ததும் அதன் முடிவுகள் வெளியிடப்படும்.

அனைத்து பொருட்களும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முறையில் மிகச் சிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் முடிவுகள் வந்ததும் உலகிற்கு அறிவிக்கப்படும்.

கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெறுவதற்கு மத்திய தொல்லியல் துறைக்கு முன் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி வந்ததும் அடுத்தகட்ட ஆராய்ச்சி பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story