சதுர்த்தி விழாவையொட்டி கறம்பக்குடி பகுதியில் 76 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


சதுர்த்தி விழாவையொட்டி கறம்பக்குடி பகுதியில் 76 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 31 Aug 2019 11:00 PM GMT (Updated: 31 Aug 2019 5:34 PM GMT)

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கறம்பக்குடி தாலுகா பகுதியில் 76 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த சில ஆண்டுகளாக கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கறம்பக்குடி நகர பகுதி மட்டுமல்லாமல் கிராம பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கறம்பக்குடியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, மோதல் வெடித்தது. இதில் கல்வீச்சு, விநாயகர் சிலை உடைப்பு, போலீஸ் தடியடி போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.

இதனால் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகளையும், கண்காணிப்பு பணிகளையும் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன் கூட்டியே திட்டமிட்டு பணிகளை ஒருங்கிணைந்து வருகின்றனர். கறம்பக்குடி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் சிலை வைக்கப்படும் பகுதி, ஊர்வல பாதை போன்றவற்றில் போலீஸ் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

76 சிலைகள்

கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் சீனிக்கடை முக்கத்தில் இந்து முன்னணி சார்பில், சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை தவிர பஸ் நிலையம், யாதவர் தெரு, சடையன் தெரு, நரங்கியப்பட்டு, கள்ளர்தெரு, கணக்கர் தெரு, சுக்கிரன்விடுதி ஆகிய பகுதிகளில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கறம்பக்குடி போலீஸ் நிலைய எல்லைக்குள் 25 சிலைகள், ரெகுநாதபுரத்தில் 12 சிலைகளும், மழையூரில் 39 பகுதியில் சிலைகளும் என மொத்தம் 76 சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே முன்எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் பகுதி வாரியாக ஊர்வலம் நடத்தப்படும் நாள், நேரம் முக்கிய வீதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது. தொடர்ந்து கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வில்லியம் மோசஸ் தலைமையில், சிலை அமைப்பு குழுவினர் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைவருக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. கறம்பக்குடியில் விநாயகர் சிலைகளின் ஒருங்கிணைந்த ஊர்வலம் வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது.


Next Story