சிறுவாணி அணை நீர்மட்டம் 42 அடியாக உயர்வு: கோவையில் இந்த ஆண்டு இறுதி வரை குடிநீர் தட்டுப்பாடு வராது - அதிகாரிகள் தகவல்


சிறுவாணி அணை நீர்மட்டம் 42 அடியாக உயர்வு: கோவையில் இந்த ஆண்டு இறுதி வரை குடிநீர் தட்டுப்பாடு வராது - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 31 Aug 2019 10:45 PM GMT (Updated: 31 Aug 2019 6:28 PM GMT)

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்து உள்ளதால் கோவை மக்களுக்கு இந்த ஆண்டு இறுதிவரை குடிநீர் தட்டுப்பாடு வராது என்று குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை,

கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்கி வருகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 50 அடி ஆகும். சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் கோவை மாவட்டத்தில் உள்ள 22 கிராமங்கள், மாநகராட்சியின் 25-க்கும் மேற்பட்ட வார்டுகளில் வினியோகம் செய்யப்படுகிறது.

வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் தான் இந்த அணைக்கு அதிகளவு தண்ணீர் வரும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் தொடக்கத்தில் சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் அடிவார பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அத்துடன் கேரளாவில் பரவலாக மழை பெய்வதால் சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.இதனால் அணையின் நீர் மட்டம் தற்போது 42 அடியாக உயர்ந்து உள்ளது.

கேரளாவில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள அரசு சிறுவாணி தண்ணீரை திறந்து விட்டது. அதை திறந்துவிடவில்லை என்றால் தற்போது சிறுவாணி அணை நிரம்பி வழிந்து இருக்கும்.

தற்போது அணையில் இருந்து தினசரி 95 எம்.எல்.டி. (9½ கோடி லிட்டர்) தண்ணீர் எடுக்கப்பட்டு கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது குறித்து குடிநீர்வடிகால்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சராசரியாக 23 மில்லி மீட்டா் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தற்போது அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. மேலும் மழை அதிகளவு பெய்தால் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது. இங்கு இருந்து தினசரி 95 எம்.எல்.டி. தண்ணீர் எடுக்கப்பட்டு கோவை மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிவரை மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். அதன்பிறகு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்தால் அடுத்த கோடை காலத்திலும் குடிநீர் வினியோகம் செய்வதில் பிரச்சினை ஏற்படாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story