வருமானவரி கணக்கு தாக்கல் நிறைவு: சென்னை அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது


வருமானவரி கணக்கு தாக்கல் நிறைவு: சென்னை அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 1 Sept 2019 4:00 AM IST (Updated: 1 Sept 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

வருமானவரி தாக்கல் செய்வதற்காக காலஅவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி ஆணையர் அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது.

சென்னை,

மாத சம்பளம் வாங்குபவர் கள், ஓய்வூதியதாரர்கள், மூலதன ஆதாயம் தொழில் வருமானம் பெறுபவர்கள் உள்பட பல்வேறு பிரிவுகளில் 2018-19-ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய நேற்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

கணக்கு தாக்கல் செய்பவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு, புதுச்சேரி அலுவலக எல்லைக்கு உட்பட்ட வருமானவரி சேவை மையங்கள் அனைத்தும் நேற்று திறந்திருந்தன.

குறிப்பாக சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு கவுண்ட்டர்களில் ஏராளமானோர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்தனர். கடைசி நாள் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இவர்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.

இதுகுறித்து வருமானவரித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் கடைசி தேதி நிறைவடைந்துள்ளது. மேலும் கால அவகாசம் வழங்கப்படுமா? என்பது குறித்து டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் தான் முடிவு செய்யப்படும். இணையதளம் மூலம் கணக்கு தாக்கல் செய்யும் வசதி உள்ளதால் பலர் இணையதளம் மூலம் தாக்கல் செய்தனர். இணையதள வசதி இல்லாதவர்கள் வருமானவரித்துறை அலுவலகங்களுக்கு வந்து கணக்கு தாக்கல் செய்தனர்.

இதுவரை வருமானவரி தாக்கல் செய்யாதவர்கள் அபராதத்தொகையுடன் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story