தமிழகத்தில் உயர் தொழில்நுட்பத்துடன் பேட்டரி பஸ்கள்: பொது இடங்களில் `சார்ஜிங்’ நிலையங்கள் அமைக்க முடிவு - போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பேட்டி


தமிழகத்தில் உயர் தொழில்நுட்பத்துடன் பேட்டரி பஸ்கள்: பொது இடங்களில் `சார்ஜிங்’ நிலையங்கள் அமைக்க முடிவு - போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 1 Sept 2019 4:30 AM IST (Updated: 1 Sept 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உயர் தொழில்நுட்பத்துடன் பேட்டரி பஸ்கள் கொண்டு வரப்பட உள்ளதாகவும், அதற்காக பொது இடங்களில் `சார்ஜிங்’ நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கோவையில் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை,

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசடைவதை தடுப்பதற்காகவும், பேட்டரி வாகன உற்பத்தி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும், பிரபல தொழில் நிறுவனங்கள் சார்பில் கோவையில் ஸ்மார்ட் மின் வாகன செயலாக்க சமூகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

இதன் தொடக்க விழா கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதை தமிழக போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசினார். தமிழக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை கூடுதல் ஆணையர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். அதைத்தொடர்ந்து விழாவில் நூல் வெளியிடப்பட்டது.

பின்னர் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள மொத்த வாகனங்களில், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் 0.5 சதவிகிதம்தான். பேட்டரி வாகனங்களுக்கான தமிழக அரசின் கொள்கைகளை 3 வாரங்களில் வெளியிட இருக்கிறோம். அதில் பல்வேறு சலுகைகள் இருக்கின்றன. அதில் அதிக அறிவிப்புகளும், சலுகைகளும் இருக்கும்.

தமிழகத்தில் பேட்டாியில் இயங்கும் வகையில் 525 எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகப்படுத்த உள்ளோம். அதில் கோவையில் 100 பஸ்கள், திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களுக்கு தலா 50 பஸ்கள் வருகின்றன.

தமிழகத்தில் உயர் தொழில்நுட்பத்துடன் பேட்டரி பஸ்களை கொண்டு வர உள்ளோம். இதற்காக பஸ் பணிமனைகள், பொது இடங்களில் `சார்ஜிங்’ நிலையங்களை அமைக்க முடிவு செய்து உள்ளோம். பேட்டரி வாகனங்களால், மற்ற வாகனங்கள் இருக்காதோ? என்ற கேள்வியும் எழுகிறது. ஆட்டோ மொபைல் துறையில் தமிழகம் தான் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.

2030-ம் ஆண்டுக்குள், 30 சதவிகிதம் பேட்டரி வாகனங்களாக மாற்றுவதுதான் எங்கள் இலக்கு. மேலும் பெட்ரோல், டீசலில் இயங்கும் மற்ற வாகனங்களும் இயங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story