ரூ.24 லட்சம் மோசடி: கூட்டுறவு வங்கி செயலாளருக்கு 9 ஆண்டுகள் சிறை பட்டுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு


ரூ.24 லட்சம் மோசடி: கூட்டுறவு வங்கி செயலாளருக்கு 9 ஆண்டுகள் சிறை பட்டுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 Sept 2019 3:45 AM IST (Updated: 1 Sept 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

ரூ.24 லட்சம் மோசடி செய்ததாக கூட்டுறவு வங்கி செயலாளருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பட்டுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது70). இவர் பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2006-ம் ஆண்டு அவர் பணியில் இருந்தபோது வங்கி பணத்தில் ரூ.24 லட்சத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தஞ்சை வணிக குற்ற புலனாய்வு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

9 ஆண்டுகள் சிறை

அதன்பேரில் வணிக குற்ற புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட துரைராஜ், பட்டுக்கோட்டை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். வழக்கின் விசாரணை பட்டுக்கோட்டை கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பட்டுக்கோட்டை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு முத்துமுருகன் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அப்போது துரைராஜுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.54 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

Next Story