தூத்துக்குடி ரவுடி கொலையில் சென்னையில் ஒருவர் கைது
தூத்துக்குடியில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாதாநகரை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி மகன் சரவணன் என்ற சிந்தா சரவணன் (வயது 36). இவர் தூத்துக்குடி கே.வி.கே. நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பிரபல ரவுடியான இவர் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர் மீது பிரபல ரவுடியான பட்டுராஜை கொலை செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.வி.கே.நகரில் வீட்டில் இருந்த சரவணனை 5 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாளையங்கோட்டையை சேர்ந்த மகாராஜன் (30) என்பவரை கைது செய்தனர். மற்ற குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
நேற்று முன்தினம் இந்த வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த வாழ்வாங்கி மகன் வடிவேல் (37), மீளவிட்டானை சேர்ந்த பாலசிங் (39) ஆகிய 2 பேரும் சிவகாசி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம், இந்த கொலையில் தொடர்புடைய தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6-வது தெருவை சேர்ந்த பிரவுன் மகன் ஜான்சன் (43) என்பவரை தனிப்படை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்தனர்.
அவரை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முனியசாமி உள்ளிட்ட சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story