தூத்துக்குடியில் வெவ்வேறு வழக்குகளில் 3 பேர் கைது - போலீஸ் நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்ததில் படுகாயம் அடைந்தனர்


தூத்துக்குடியில் வெவ்வேறு வழக்குகளில் 3 பேர் கைது - போலீஸ் நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்ததில் படுகாயம் அடைந்தனர்
x
தினத்தந்தி 1 Sept 2019 4:15 AM IST (Updated: 1 Sept 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வெவ்வேறு வழக்குகளில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலீஸ் நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்ததில் கால்முறிந்து படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது;-

தூத்துக்குடி,

தூத்துக்குடி மட்டக்கடை சின்னக்கடை தெருவை சேர்ந்தவர் ஜேசு மகன் ஜெகன் என்ற பில்லா ஜெகன் (வயது 44). இவர் மீது புதியம்புத்தூர், தூத்துக்குடி தென்பாகம், மத்தியபாகம், வடபாகம், தாளமுத்துநகர் போலீஸ் நிலையங்களில் 2 கொலை வழக்குகள், கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவர் கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பாலகுமார் (32) என்பவரை தன்னிடம் வேலைக்கு வர அழைத்தார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் 1-வது ரெயில்வே கேட் அருகே நின்று கொண்டு இருந்த பாலகுமாரிடம் பில்லா ஜெகன் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாலகுமார் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், பில்லா ஜெகனை கைது செய்தார்.

தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த சந்தனராஜ் (33) என்பவர் நேற்று முன்தினம் புதிய முனியசாமிபுரம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ரவுடியான தாளமுத்துநகர் வெள்ளப்பட்டியை சேர்ந்த விமல்ராஜ் (37) என்பவர், சந்தனராஜிடம் அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் விமல்ராஜை கைது செய்தனர்.

அதேபோல் மீளவிட்டான் பகுதியை சேர்ந்த மதன் (42) என்பவர் முத்தையாபுரம் பொட்டல்காடு விலக்கு பகுதியில் நேற்று முன்தினம் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த முத்தையாபுரம் பாரதிநகரை சேர்ந்த கபில்தேவ் (27) என்பவர், மதனிடம் அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் கபில்தேவை கைது செய்தனர். இவர்கள் 2 பேர் மீது கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கைது செய்யப்பட்ட 3 பேரும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் வைத்து விசாரிக்கப்பட்டனர். அப்போது, அவர்கள் போலீஸ் நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்ததாகவும் அதனால் அவர்களின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளார்.

படுகாயம் அடைந்த அவர்களுக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story