ஜப்பானிய தொழில்நுட்பத்தில் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும்: கலெக்டர் ஷில்பா அறிவுறுத்தல்
ஜப்பானிய தொழில்நுட்பத்தில் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா அறிவுறுத்தி உள்ளார்.
நெல்லை,
நெல்லை அருகே மானூரை அடுத்துள்ள மதவக்குறிச்சியில் பிரமிடுகள் அமைப்பில் அதாவது மியோ-வாக்கி முறையில் நாற்றாங்கால் அமைத்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மையத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மரங்கள் பூமித்தாயின் நுரையீரல்கள் என்று அழைக்கப்படுகிறது. அவை மனிதனின் சுவாசத்துக்கு தேவையான காற்று மற்றும் தேவையான அளவு மழை பெய்வதற்கு உதவியாக உள்ளது. மரங்களை வளர்ப்பதற்கு முன்னோடியாக நல்ல தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் நாற்றாங்கால் அவசியம் ஆகும். இதற்காக நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலக வளாகங்களிலும் நாற்றாங்கால் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மூலமாகவும் நாற்றாங்கால் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
மானூர் யூனியன் மதவக்குறிச்சியில் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இணைந்து பிரமிடுகள் முறையிலான மியோ-வாக்கி என்று அழைக்கக்கூடிய ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த முறையில் மண் மற்றும் உரம் கலந்து மணலால் முக்கோண வடிவில் மணற்பரப்பு அமைக்கப்பட்டு, தமிழ் எழுத்து ‘அக்கனா’ முறையில் குழி எடுத்து பல்வேறு வகையிலான மரக்கன்றுகள் குறிப்பிட்ட இடைவெளியில் நட்டு வளர்க்க வேண்டும். மணற்பரப்பில் எளிதாக வேர்கள் ஊடுருவி செல்வதுடன் உரங்களை எளிதாக கிரகித்து நிலத்தடிக்கு சென்று நீரை உறிஞ்சி விரைவாக வளர்கிறது. இதில் பலவகை மரக்கன்றுகளின் வேர்களும் ஒன்றோடு ஒன்றாக இணைந்து இருப்பதால் பிடிப்பு அதிகமாகும். ஒரு வேர் நீரை உறிஞ்சும்போது அது மற்ற வேர்களுக்கும் எளிதாக கிடைப்பதால் போட்டி போட்டுக் கொண்டு வேகமாக வளர்கிறது. இந்த நாற்றாங்காலில் வளரும் கன்றுகள் தரமானதாக இருக்கிறது.
இதில் மா, பலா, புங்கை, புளி, மருதம், வேம்பு, கொய்யா, நெல்லி, தேக்கு உள்ளிட்ட 7,500 மரக்கன்றுகள் 3 மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்டு நடவு செய்யும் அளவுக்கு வளர்ந்து வருகின்றன. இந்த தொழில்நுட்பத்தில் அதிகளவு மரக்கன்றுகளை மாவட்டம் முழுவதும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. பொதுமக்களும் இந்த ஜப்பானிய தொழில்நுட்பமான மியோ-வாக்கி முறையில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு மண் வளம், மழை வளம் பெருகச் செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.
பின்னர் அவர் அதே வளாகத்தில் உள்ள மண் புழு உற்பத்தி பிரிவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், சீனிவாச சுடலைமுத்து உள்பட அதிகாரிகள், விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story