புளியங்குடி அருகே பயங்கரம்: அ.தி.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை - கூட்டுறவு சங்க தலைவருக்கு வலைவீச்சு


புளியங்குடி அருகே பயங்கரம்: அ.தி.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை - கூட்டுறவு சங்க தலைவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Sept 2019 4:15 AM IST (Updated: 1 Sept 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி அருகே அ.தி.மு.க. நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கூட்டுறவு சங்க தலைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புளியங்குடி,

நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டையை சேர்ந்தவர் திருநீலபாண்டி (வயது 46). கேபிள் டி.வி. ஆபரேட்டரான இவர் அ.தி.மு.க. கிளை செயலாளராகவும் இருந்தார். மேலும் தலைவன்கோட்டை நகர கூட்டுறவு சங்க துணை தலைவராகவும் பணியாற்றி வந்தார். அதே கூட்டுறவு சங்கத்தில் தலைவராக இருப்பவர் விஜயபாண்டி (45).

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, கூட்டுறவு சங்கத்தில் இருந்து கடன் கொடுத்ததில் முறைகேடு நடந்ததாக தலைவர் விஜயபாண்டி மீது திருநீலபாண்டி உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, விஜயபாண்டியிடம் இருந்த காசோலை உள்ளிட்டவற்றை வாங்கி, பொறுப்புகளை கூட்டுறவு சங்க செயலாளரிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது. கடந்த 6 மாதத்துக்கு முன்பு சிலர் திருநீலபாண்டியின் வீட்டை தாக்கினர். இதற்கு விஜயபாண்டி தான் காரணம் என போலீசில் திருநீலகண்டன் புகார் செய்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை திருநீலபாண்டி தலைவன்கோட்டைக்கு அருகே உள்ள அய்யனார் கோவில் அருகில் கேபிள் டி.வி. ஒயரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு வந்த விஜயபாண்டி அவரிடம் தகராறு செய்தார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த விஜயபாண்டி அரிவாளால் திருநீலபாண்டியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் திருநீலபாண்டி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் விஜயபாண்டி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் திருநீலபாண்டியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான விஜயபாண்டியை வலைவீசி தேடி வருகிறார்கள். முன்விரோதத்தில் அ.தி.மு.க. நிர்வாகி கொலை செய்யப்பட்ட இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருநீலபாண்டிக்கு ஜோதிலட்சுமி (40) என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

Next Story