காட்பாடி அருகே ரூ.3 கோடி கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்பு - சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் போலீசார் செயல்பட்டு நடவடிக்கை
காட்பாடி அருகே ரூ.3 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழில்நுட்ப கல்லூரி மாணவர் அதிரடியாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக அவருடன் படித்த சக மாணவர்கள் 7 பேரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தல் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காட்பாடி,
வேலூர் சத்துவாச்சாரி வேளாளர்தெருவை சேர்ந்தவர் கென்னடி, வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி மைதிலி. இவர்களுடைய மகன் கோகுல் (வயது 18) காட்பாடி அருகே உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற கோகுல் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதையடுத்து அவரின் பெற்றோர் கோகுலின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். அதற்கு அவர் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. அதனால் பதற்றம் அடைந்த அவர்கள் கோகுலின் நண்பர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தனர். ஆனாலும் கோகுல் குறித்த தகவல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இரவு 8 மணியளவில் கோகுலின் செல்போன் மூலம் மர்மநபர்கள் அவருடைய தாயாரை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர்கள் ‘உங்களது மகனை நாங்கள் தான் கடத்தி வைத்திருக்கிறோம். ரூ.3 கோடி தந்தால் மட்டுமே அவனை விடுவிப்போம்’ என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கோகுலின் பெற்றோர் அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து முதற்கட்டமாக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தொடர்ந்து சத்துவாச்சாரி போலீசார், கோகுலின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் கோகுலின் செல்போன் எண் மூலம் போலீசார் துப்பு துலக்க தொடங்கினர். செல்போன் எண்ணை ‘டிராக்’ செய்தபோது வள்ளிமலை, மேல்பாடி பகுதிகளில் மர்மநபர்கள் சுற்றித்திரிவது தெரிய வந்தது. இதையடுத்து மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் தங்களை அடையாளப்படுத்தாமல், மர்மநபர்களை கோகுலின் தாயாருடன் பேச வைத்தனர்.
அப்போது அவர்கள் ரூ.3 கோடியை உடனடியாக வள்ளிமலை கோவில் அருகே கொண்டு வரும்படியும், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கக்கூடாது என்றும், பணத்தை கொடுத்தால் மகன் வீட்டுக்கு தானாக வந்துவிடுவான் என்று கூறினர். அதற்கு அவர் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ரூ.5 லட்சமும், 50 பவுன் நகையும் தருவதாக முடிவானது. அவற்றை உடனடியாக கொண்டு வந்து தரும்படி மர்மநபர்கள் போனை துண்டித்தனர்.
இதையடுத்து போலீசார் ‘டிராவல் பேக்’ ஒன்றில் பேப்பரை வைத்து பணம் இருப்பது போன்று தோற்றம் ஏற்படுத்தினர். அந்த பேக்கை மைதிலியிடம் கொடுத்து மர்மநபர்களிடம் கொடுக்கும்படி கூறினர். தொடர்ந்து அவர் ஒரு காரிலும், அவரை பின்தொடர்ந்து சிறிதுதூர இடைவெளியில் 3 கார்களில் தனிப்படையை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராதாகிருஷ்ணன், சங்கர், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சென்றனர். மேலும் வள்ளிமலை கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே போலீசார் தங்களை சுற்றி வளைத்து பிடிக்க திட்டமிட்டுள்ள தகவல் மர்மநபர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் வள்ளிமலை கோவில் அருகே கோகுலை விட்டு விட்டு தப்பிச்சென்றனர். மேலும் கோகுலின் செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்தனர். தனிப்படை போலீசார் வள்ளிமலை கோவில் அருகே தனியாக நின்று கொண்டிருந்த கோகுலை மீட்டனர்.
இதுதொடர்பாக தனிப்படை போலீசார் கோகுலிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில், சக மாணவர்கள் 4 பேரும் மோட்டார் சைக்கிளில் கடத்தியதாகவும், கண்ணை கட்டி வைத்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றதாகவும் கோகுல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் 4 மாணவர்களையும் பிடித்தனர். இதுதொடர்பாக லத்தேரி போலீசார் வழக்குப்பதிந்து சக மாணவர்கள் 4 பேரிடம் விசாரித்தபோது கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மேலும் 3 பேர் பிடிபட்டனர். இவர்களிடமும், மீட்கப்பட்ட கோகுலிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.3 கோடி கேட்டு மாணவர் கடத்தப்பட்டதும், சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் போலீசார் அதிரடியாக செயல்பட்டு மீட்ட சம்பவமும் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story