நிலவில் ஆய்வு நடத்த இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் மிகப்பெரிய சாதனை நாசா முன்னாள் விஞ்ஞானி பேட்டி


நிலவில் ஆய்வு நடத்த இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் மிகப்பெரிய சாதனை நாசா முன்னாள் விஞ்ஞானி பேட்டி
x
தினத்தந்தி 1 Sept 2019 3:45 AM IST (Updated: 1 Sept 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

நிலவில் ஆய்வு நடத்த இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் மிகப்பெரிய சாதனை என்று நாசா முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ.தாமஸ் கூறினார்.

நாகர்கோவில்,

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானியும், முன்னாள் விண்வெளி வீரருமான டொனால்ட் ஏ.தாமஸ் இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

சந்திரயான்-2 விண்கலம்

நிலவில் ஆய்வு நடத்த இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான்-2 விண்கலம் மிகப்பெரிய சாதனையாகும். இந்த விண்கலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் தருணத்தை நாசா உன்னிப்பாகவும், ஆர்வமாகவும் கவனித்து வருகிறது. 5 ஆண்டுகளில் நாசா நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. இதனால் சந்திரயான்-2 நிலவில் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் அனைத்தும் மிக முக்கியமானது.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் நாசா விண்வெளியில் சுற்றுலா தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் விண்வெளியில் ஒரே கூரையின்கீழ் பயணித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அனுபவம்

முன்னதாக அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாணவர்கள் மத்தியில் தனது விண்வெளி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும் மாணவ- மாணவிகள் அவருடன் கலந்துரையாடினர். அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.


Next Story