சிறுமி பலாத்கார வழக்கு: வீட்டு வேலைக்கு அழைத்து சென்ற பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை
சிறுமி பலாத்கார வழக்கில் வீட்டு வேலைக்கு அழைத்து சென்ற பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 45). இவர், தனது உறவினரான 15 வயது சிறுமியை கடந்த 2009-ம் ஆண்டு வேலை வாங்கி தருவதாக கூறி சென்னைக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்குள்ள டாக்டர் ஒருவரிடம் சிறுமியை ஒப்படைத்து விட்டு ராணி மட்டும் ஊருக்கு வந்துவிட்டார்.
இதையடுத்து சென்னையில் சில நாட்கள் மட்டுமே தங்கிய பிறகு அந்த சிறுமியை ராணியிடமே அந்த டாக்டர் திரும்ப ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மேட்டூர் வந்த அந்த சிறுமி தன்னை பலாத்காரம் செய்து விட்டனர் என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணியை கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து சென்ற ராணிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.77 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட வக்கீல் தனசேகரன் ஆஜரானார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், சிறுமியை பலாத்காரம் செய்த டாக்டர் யார்? அவரை ஏன் கைது செய்யவில்லை? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது, இந்த வழக்கு விசாரணையை மேட்டூரில் பணியாற்றிய 3 இன்ஸ்பெக்டர்கள் கையாண்டுள்ளனர். அவர்கள் சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளியை கைது செய்யாமல் இருந்தது ஏன்? என்பது தெரியவில்லை. 2015-ம் ஆண்டில் இருந்து தான் இந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களை ஆய்வு செய்தேன். எனவே, இந்த வழக்கில் சிறுமியை பலாத்காரம் செய்தவரை ஏன் கைது செய்யவில்லை என்பது குறித்தும், சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளேன், என்றார்.
Related Tags :
Next Story