பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: சேலத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
நாடு முழுவதும் 10 பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வங்கி தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கோட்டை பகுதியில் உள்ள கனரா வங்கி முன்பு நேற்று மாலை சேலம் மாவட்ட வங்கி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் சுரேஷ்குமார், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் உள்பட பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும், மக்களின் பணத்தை பாதுகாக்க வேண்டும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறுகையில், பொதுத்துறை வங்கிகளை இணைத்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். தற்போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வங்கிகள் இணைப்பால் பல வங்கி கிளைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரிய வங்கிகள் மட்டும் தான் செயல்படும். இதன்மூலம் பெரும் முதலாளிகள் தான் பயன்பெறுவார்கள். ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடன் பெறுவதில் சிரமம் ஏற்படும். வங்கிகள் இணைப்பு என்பது தேவையற்றது. எனவே வங்கிகள் இணைப்பு முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story